TN Buses: நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


பொங்கல் பண்டிகை:


வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.


இதனால், ஜனவரி 12ஆம் தேதியே வெளியூருக்கு பயணமாக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.  வழக்கமாக பண்டிகை நேரத்தில் பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  


19,484 சிறப்பு பேருந்துகள்:


ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படும்.


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படும். இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம்


கூடுதல் இணைப்பு பேருந்துகள்:


இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே.நகர் ஆகிய 6 பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 


எந்தெந்த ஊர்களுக்கு கிளாம்பாக்கம் செல்லனும்?


தென்மாவட்டங்களுக்கு செல்லுக்கூடிய மக்கள் அனைவரும் கிளாம்பாக்கம் சென்று தான் செல்ல வேண்டும். அதாவது, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ராமேஸ்வரம், எர்ணாகுளம் ஆகிய இடங்களுக்கு செல்லும் SETC பேருந்து இங்கு இருந்து தான் புறப்படும். 


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திட்டக்குடி, செந்துறை, அரியலூர், திருச்சி, சேலம், வேளாங்கன்னி, நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகள் இங்கு இருந்து தான் புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.