படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த தமிழக பாஜக-வின் செல்வாக்கை உயர்த்த நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு மட்டும் பாஜக-விற்கு சவால் அளித்து வருகிறது. கடந்த முறை முதன்முறையாக 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்கள் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர்.
தமிழ்நாட்டில் சறுக்கலில் பாஜக:
பாஜக-வின் மிகப்பெரிய பலமாக கருதப்படும் அண்ணாமலையும் கடந்த ஓராண்டாகவே கட்சியில் இருந்து ஒதுங்கியே இருந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
இதனால், வரும் தேர்தலில் பாஜக-வின் வாக்கு வங்கி பெருமளவு சரியும் என்றே கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக-வின் செல்வாக்கு வளர்ந்து வந்த தருணத்தில் பாஜக மீண்டும் சறுக்கல் பாதைக்கு சென்றிருப்பது அக்கட்சியின் தேசிய தலைமைக்கு வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.
தொண்டர்களைச் சந்திக்க உத்தரவு:
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த பாஜக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியை வளர்ப்பது குறித்தும், சட்டசபை தேர்தல் தோல்வி குறித்தும், அண்ணாமலையின் விலகல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் அண்ணாமலையை பற்றி பொதுவெளியில் அதிகம் விமர்சிக்க வேண்டாம் என்றம், அதேசமயம் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகளை மீண்டும் கட்சியின் உள்ளே கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கட்சியின் நகர, பேரூராட்சி, உள்ளாட்சி அளவில் கட்சியை வலுப்படுத்தவும், பூத் அளவில் நிர்வாகிகளை அதிகரிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான நிர்வாகிகளும், முக்கிய நிர்வாகிகளும் கட்சியின் தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் கட்சியில் தொடர்ந்து பயணிக்குமாறு அறிவுறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்:
இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் தமிழக பாஜக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. அதேசமயம், உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக போட்டியிடும். உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் கூட்டணிக்குள்ளே தனித்துப் போட்டியிடுவது வழக்கம்.
அவ்வாறு போட்டியிட்டால் இந்த முறை தவெக- திமுக - அதிமுக- நாம் தமிழர் என பல முனைப் போட்டிகளை பாஜக எதிர்கொள்ளும். இதனால், அதற்கான பணிகளை தற்போதே தொடங்கவும் தமிழக பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















