தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழக பாஜகவினர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ
சமீபத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில், “ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், முதலமைச்சரின் மருமகனான சபரீசனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர். இத்தகைய தொகையை இவர்கள் மூதாதையர்கள் கூட சம்பாதிக்கவில்லை. இருவரும் எப்படி இவ்வளவு பெரிய தொகையை கையாளப் போகிறார்கள்” என உரையாடல்கள் இருந்தது.
விளக்கம் கொடுத்த பிடிஆர்
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை. இந்த ஆடியோ ஒரு மோசடி. ஆடியோ வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் பதிவிட்டார். அதில், “இருக்கும் பணிகளுக்கிடையே சமூக வலைத்தளங்களின் சோஷியல் மீடியாக்களின் மண் வாரித் தூற்றப்படும் விஷயங்களுக்கு பதிலளிக்க நேரமிருப்பதில்லை. கடந்த 2 வருடங்களில் என்னைப் பற்றி ஏராளமான அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன. கடமையைச் செய்வதே பதில் என்னும் வகையில் அவற்றுக்கு நான் பதிலளிக்காமல் இருந்து வந்தேன். என்னை வில்லனாக காட்ட முதலில் முயற்சி செய்தார்கள்.
நான் பொது வெளியில் என்னவாக இருக்கிறேனோ, அதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான். என்னையும் அவரையும் இதன்மூலம் பிரிக்க நினைக்கும் யுக்தி வெற்றியடையாது. பத்திரிக்கைகளும் போலியான இந்த மூன்றாம் நபர் தகவல்களை வெளியிடுவதால் வருத்தமடைகிறேன்” என தெரிவித்திருந்தார்.
மேலும் இதனுடன் இரண்டு விஷயங்களையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருந்தார். ஒன்று, போலியான ஆடியோக்களைத் தயாரிக்கும் இந்த திறனுடன், மேலும் மோசமான ஆடியோ வீடியோ கிளிப்புகள் வெளிவரலாம். மற்றொன்று, பொறுப்பான அரசியல்வாதிகளும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் சரியான தரவுகளுடன் அவற்றை பிரசுரிக்கவும், வெளியிட்டுப் பேசவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து நான் வெளியிடும் கடைசி அறிக்கை இதுவாகத்தான் இருக்கும். சட்ட நடவடிக்கையின் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.
ஆளுநரை சந்தித்த பாஜகவினர்
இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பாஜகவினர் , ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்ட குழுவினர், ஆடியோவில் உள்ள குரல் யாருடையது என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிவித்தனர்.