Annamalai Slams DMK: மொழிக் கொள்கை விஷயத்தில் திமுக கபட நாடகம்... அண்ணாமலை சாடல்...

கரூரில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மொழிக் கொள்கை விஷயத்தில் அவர்கள் கபட நாடகமாடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Continues below advertisement

பாஜக தமிழ்நாடு சார்பில், பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

”மொழிக் கொள்கை விஷயத்தில் திமுக நாடகம்”

கரூர் கூட்டத்தில், மொழிக் கொள்கை குறித்து பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் என கூறும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். ஆனால், நடுத்தர வர்கத்தினர் முன்னேறிவிடக் கூடாது என்பதால், அவர்களது குழந்தைகள் இரண்டு மொழியை மட்டும் தான் கற்க வேண்டும் என்று திமுக கூறுவதாகவும் சாடினார் அண்ணாமலை. கல்வி அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷின் மகன், ப்ரெஞ்ச் மொழி கற்பதாகவும் விமர்சித்த அண்ணாமலை, மத்திய அரசு, மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியையே கற்கச் சொல்வதாகவும், இந்திதான் கற்க வேண்டும் என்று கூறவில்லை என்றும் விளக்கமளித்தார்.

உங்களுக்கு வெட்கமாக இல்லையா என திமுகவிற்கு கேள்வி எழுப்பிய அண்ணாமலை

கற்றவனுக்கு செல்லுமிடமெல்லாம் என்ன சிறப்பு என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய அண்ணாமலை, தன்னை மோடி இன்று மதிக்கிறார் என்றால், அதற்கு காரணம் தன்னுடைய கல்விதான் என்றும் தெரிவித்தார். ஆனால், திமுகவை பொறுத்தவரை, தங்களைவிட யாரும் முன்னேறிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாக விமர்சித்தார்.

திமுகவில், கருணாநிதிக்குப்பின் ஸ்டாலின், ஸ்டாலினுக்குப்பின் உதயநிதி, உதயநிதிக்குப்பின் இன்பநிதி என்று, அப்படியேதான் சுற்ற வேண்டும என நினைப்பதாகவும், நம்முடைய குழந்தைகள் கை கட்டிக்கொண்டு போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று நினைப்பதாகவும் கூறி, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என திமுகவிற்கு கேள்வி எழுப்பினார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தையும், மூன்றாவதாக பிடித்த ஏதாவது மொழியை படியுங்கள் என்றுதான் மோடி கூறுகிறாரே தவிர, அவர் எங்கேயும் இந்தியைத்தான் படிக்க வேண்டும் என்று கூறவில்லை என்றும் அண்ணாமலை விளக்கமளித்தார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்தாலே இந்தி பேசாமல், ஆங்கிலத்தில்தான பேசுகிறார் என்றும் கூறினார் அண்ணாமலை.

ஆனால், திமுகவினர் இண்டி கூட்டணி என்ற போர்வையில், மேடை போட்டு, இந்தி திணிக்கப்படுவதாக பொய் கூறி வருவதாக அண்ணாமலை சாடினார். அதனால், திமுகவினரின் கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், இதையெல்லாம் யோசித்து வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola