தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்த விவகாரத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். 

காட்டுப்பன்றிகள்:

அவர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் இன்னல்கள் குறித்து அமைச்சர்கள் நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அப்போதைய அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனையின்படி குழு அமைக்கப்பட்டது. 

தலைமை வனப்பாதுகாப்பாளர், தலைமை வன உயிர்க்காப்பாளர், விவசாயப் பிரதிநிதிகள், வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டத்துறை, அறிவியல் நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் 19 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, நேற்று வனத்துறை சார்பில் இந்த அரசாணை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

காட்டுப்பன்றிகளை சுட அனுமதி:


காட்டுப்பன்றிகள் என்பது ஒன்றிய அரசின் வனவிலங்குகள் பட்டியலில் உள்ளது. வன விலங்கு அறிவிப்பு பட்டியலில் காட்டுப்பன்றிகளும் உள்ளது. அதை விலக்குவது சாதாரணமாக முடியாது. அதேசமயத்தில், வன விலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என்று இங்கிருந்த விவசாயிகள் எல்லாம் முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மொத்தம் 25 பேர் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளனர். 


அந்த அடிப்படையில்தான் இந்த அரசாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சட்டவிதிப்படி, காப்புக்காட்டில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை. அதேசமயத்தில் 1 கி.மீட்டர் முதல் 3 கி.மீட்டர் வரையிலான பகுதிகளில் காட்டுப்பன்றிகளை பிடித்தால் அதை திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காக வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகமாக நியமிக்கப்படுவார்கள். காட்டுப்பன்றிகள் வனப்பகுதியில் இருந்து 3 கி,மீட்டருக்கு அப்பால் வந்தால் அதை சுடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும். 


அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு யாரு சுடலாம்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி வனத்துறை அதிகாரிகள் மட்டுமே சுடலாம். அதற்கான அதிகாரம்  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு அவர் கூறினார். 

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள், மலையடிவாரத்தில் விவசாயம் செய்பவர்கள் காட்டுப்பன்றிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்பு, மக்காச்சோளம், தக்காளி போன்ற சாகுபடி காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.