TN Assembly Session LIVE: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றம்
TN Assembly Session Today LIVE Updates: சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ABP நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
ABP NADULast Updated: 14 Feb 2024 11:55 AM
Background
2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின்...More
2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.50 மணியளவில் தலைமைச் செயலகம் வருகிறார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர். இதனையடுத்து ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு ஆளுநருக்கு அளிக்கப்படுகிறது. சரியாக காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குகிறது. காலை 10.02 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்க தொடங்குவார். ஆங்கிலத்தில் இருக்கும் அந்த உரையானது சுமார் 40 நிமிடங்கள் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக சட்டப்பேரவை தொடரில் பேசப்படும் ஆளுநர் உரையும் முக்கியத்துவம் பெறும். காரணம் அதில் சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆளுநர் உரையிலும் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என முடிவு செய்யும். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி 2024 -2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதற்கு மறுநாள் 20 ஆம் தேதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் துறையின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்பின்னார் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதேசமயம் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதமும் நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மானிய கோரிக்கை விவாதம் ஜூன் மாதம் நடத்த அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. விவாதம் நடைபெறும் நிலையில் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றுகிறார். இத்துடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெறும். இதற்கிடையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி விவாதம் செய்ய எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளது. கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையில் சில வார்த்தைகளை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு முன்பே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இப்படி பல சம்பவங்கள் நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு சுமூகமாக சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
TN Assembly Session LIVE: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தனித்தீர்மானம் - அரசியல் கட்சிகள் வரவேற்பு
ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானங்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளது.
TN Assembly Session LIVE: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தனித்தீர்மானம் - பாஜக வெளிநடப்பு
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தனித்தீர்மானம் முன்மொழிந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
N Assembly Session LIVE: ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிரான தனித்தீர்மானம் - முதலமைச்சர் உரை
அதிகார பரவலுக்கு எதிரானது என்பதால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இந்த திட்டம் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று. நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்த முடியாத சூழல் உள்ளது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது இயலாத ஒன்றாகும்.
TN Assembly Session LIVE: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை - சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் முன்மொழிவு
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியல் அமைப்பு அடிப்படை அம்சங்களுக்கு எதிரானது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Assembly Session LIVE: சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஓபிஎஸ் இருக்கை மாற்றம்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.அந்த இடத்தில் இதுவரை இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு 2வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
TN Assembly Session LIVE: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கொடுத்த அறிக்கையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்திருந்தால் மக்கள் நடுரோட்டில் போராட்டம் நடத்தியிருக்க மாட்டார்கள். அதனை சரி செய்ய வேண்டும் என்று தான் சொன்னோம்.
முதலமைச்சர் ஸ்டாலின்: சிறு சிறு பிரச்சினைகள் மட்டுமல்ல பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை தீர்த்து வைத்து தான் திறந்து வைத்தோம். அமைச்சரே, ‘இன்னும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள். நேரடியாக வாருங்கள். தீர்த்து வைக்கிறோம்’ என சொல்லியிருக்கிறார். அதனால் இந்த பிரச்சினையை இத்தோடு முடித்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
TN Assembly Session LIVE: சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கடிதம்!
சட்டப்பேரவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது எக்ஸ் (X ) தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியுள்ளார்.
தேமுதிக நிறுவனரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், முன்னாள் உறுப்பினர்கள் கு.க.செல்வம், வடிவேலு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் றைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளுக்குள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டுமானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான வழக்கின்போது இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படும் ஆளுநர்கள் - அமைச்சர் ரகுபதி
ஆளுநருடன் சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால் ஆளுநர்கள் எல்லாம் ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார்கள். ரிமோட்டை இயக்குபவர்கள் எப்படி இயக்குகிறார்களோ அதன் அடிப்படையில் தான் இயங்குகிறார்கள். இவர்கள் சுயமாக இயங்க முடியாது என, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், “பிப்ரவரி 9ல் பெறப்பட்ட அரசின் உரையில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் இருந்தன. உரை தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் கடிதம் எழுதியிருந்தேன்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. சபாநாயகர் அப்பாவு தனது பதவிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்டார். இதன் காரணமாக வெளியேறியதாக ஆளுநர் தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
TN Assembly LIVE : தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்க மறுக்கிறார் ஆளுநர் - அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்க மறுக்கிறார் ஆளுநர். கொத்தடிமைகளாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் ஆளுநரின் செயல்பாட்டை விமர்சிக்கமாட்டார்கள் - அமைச்சர் ரகுபதி
TN Assembly Session LIVE: புதுமைப்பெண் திட்டம் - பள்ளியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
”புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.” - சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையில் குறிப்பிட்டார்.
குற்றங்களைத் தடுப்பதில் அரசு சமரசமின்றி செயல்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் சமரசமின்றி செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு : சபாநாயகர் அப்பாவு
TN Assembly Session LIVE: குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!
சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது : ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது
தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது”
TN Assembly Session LIVE: புதிய வேலைவாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சட்டப்பேரவை உரையில் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
TN Assembly Session LIVE: தேசிய கீதம் புறக்கணிப்பு - தமிழக அரசின் உரையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்.
TN Assembly Session LIVE: சட்டப்பேரவை கூட்டத்தொடர் - கருப்பு பட்டை அணிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.
TN Assembly Session: சட்டப்பேரவையில் ஆளுநர் உரை - டிடி சேனலில் நேரடி ஒளிபரப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10.02 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கும் உரை நிகழ்ச்சியை டிடி தமிழ் நியூஸ் மூலம் நேரடியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.