TN Assembly Live: சட்டப்பேரவை கேள்வி நேரம் - உறுப்பினர்களின் கேள்விகளும் அமைச்சர்களின் பதில்களும்...!

TN Assembly Live Update: சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..

ABP NADU Last Updated: 06 May 2022 11:49 AM
பட்டண பிரவேச தடையை நீக்குக - எடப்பாடி பழனிசாமி

500 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் தடை விதித்து இருக்கிறார்கள். இங்குள்ள திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு பட்டண பிரவேசத்தை தடை செய்துள்ளார்கள். அதுவும் அங்கே இருக்கின்ற பல்லாக்கு தூக்குபவர்கள், பாரம்பரியமாக பட்டண பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதீன எல்லைக்குள் தான் இந்த நிகழ்வு நடந்து வருகிறது. அதை தடை செய்ய அவசியமில்லை, இருப்பினும் சில அரசியல் காரணங்களுக்காக தடை செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம்  அவர்களுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆன்மீகத்தில் இந்த அரசு தலையிடுவது ஏற்று கொள்ள முடியாது.

கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - ஈபிஎஸ்

விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் குறிப்பிட்ட செய்தியும், தற்போது உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்ட செய்தியும் முரண்பட்டுள்ள காரணத்தினால், இந்த வழக்கை நேர்மையாக நடைபெற சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை ஏற்காமல் சிபிசிஐடியிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்கள். விக்னேஷ் உடலில் காயங்கள் இருப்பதால் இதை கொலைவழக்காக பதிவு செய்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொலை வழக்காக பதிவு செய்யப்படும் என முதல்வரே கூறிய பிறகு நம்முடைய காவல்துறை அதிகாரிகளே இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது

விசாரணை கைதி விக்னேஷ் மரணம் - அதிமுக வெளிநடப்பு

விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் முன்னுக்கு பின்னான தகவல்கள் உள்ளதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு 

மதுரை மக்களின் மெரினாவாக விளங்கும் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் லேசர் ஷா

செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ: மதுரை மக்களின் மெரினாவாக விளங்கும் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் லேசர் ஷா நடத்தி கொண்டுத்தால் நன்றாக இருக்கும். அமைச்சர் இளைஞராக இருக்கிறார். டாக்டார் வேற. விஞ்ஞான ரீதியாக லேசர் ஷா நடத்தினால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்


மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர்: மதுரை தெப்பக்குளத்தில் பொதுமக்கள் வசதிக்காக திருக்கோயில் மூலம் நபர் ஒன்றுக்கு 20 ரூபாய் கட்டணத்தில் படகு சவாரி விடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை, ஆட்சியரின் தடையில்லா சான்று பெற்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்

வீராணம் ஏரியில் சாகச சுற்றுலா மையம் ?

சிந்தனை செல்வன், காட்டுமன்னார் கோயில் எம்.எல்.ஏ: சிறந்த நீர்வளக் கட்டமைப்பிற்கான விருதை பெரும் வீராணம் ஏரி சுற்றுலா பகுதியாக அறிவிக்கப்படுமா?


மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர்: அணைக்கட்டு பகுதிகளில் சாகச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம், இதற்காக கன்னியாகுமரி சித்தாறு அணை 1, 2, தென்காசி குண்டாறு, நீலகிரி காமராஜர் சாகர் அணையில் ஆய்வு செய்துள்ளோம், கண்டிப்பாக வீராணம் ஏரியை ஆய்வு செய்து சாகச நடவடிக்கைகளில் என்ன செய்யலாம் என்பதை ஆய்வு செய்து அறிவிக்கிறோம் 


 

மதுரைக்கு பொழுதுபோக்கு செல்லூர் ராஜூ....!

செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ: 20 லட்சம் மக்கள் வசிக்கும் மதுரையில் எந்த பொழுதுபோக்கு வசதிகளும் இல்லை 


தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்: மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே தெரிந்த விஷயம் (பேரவையில் சிரிப்பலை)

அதிகரிக்கும் இளம் வயது திருமணங்கள் - கள்ளக்குறிச்சியில் மகளிர் கல்லூரி வேணும்...!

ம.செந்தில் குமார், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இள வயது திருமணங்கள் அதிகரிப்பதால் அரசு மகளிர் கல்லூரி அவசியம் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தி அமர்கிறேன்


பொன்முடி, உயர்க்கல்வித்துறை அமைச்சர்: கல்லூரிகளில் மகளிருக்கு ஷிப்ட் சிஸ்டம் கொண்டு வந்ததற்கு பத்திரிக்கைகளில் தலையங்கமே எழுதி உள்ளார்கள். பெண்கள் கல்லூரி என்று தனியாக உருவாக்குவதைவிட இருபாலரும் சேர்ந்து படிப்பதில் ஒன்றும் தவறில்லை; அதைத்தான் வளர்க்க வேண்டும் என நினைக்கிறோம்.கள்ளக்குறிச்சியில் அந்த அவசியம் எழவில்லை. 

குறைந்து வரும் எஞ்சினியரிங் அட்மிஷன்

பொன்முடி, உயர்க்கல்வித்துறை அமைச்சர்: இப்போது வைத்திருக்கும் பொறியியல் கல்லூரி எல்லாம் மூடும் சூழல் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்த 6 கல்லூரிகளில் ஒன்று மூடப்பட்டுவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 2,00,348 பொறியியல் இடங்கள் உள்ள நிலையில் அதில் 1,28,474 பேர் மட்டுமே சேர்ந்துள்ளார்கள். 71,934 இடங்கள் காலியாக உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2010 பொறியியல் இடங்களில் 782 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.


பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார். தொழில்முனைவோர், பல்கலைக்கழக துணை வேந்தர்களை இணைத்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மேலும் பொறியியல் கல்லூரியின் அட்மிஷன் என்பது இந்த ஆண்டும் இப்படிதான் இருக்கும் என கருதுகிறோம்.  

மதுரை மாநகராட்சியுடன் விமான நிலையம் இணைக்கப்படுமா?

ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ: மதுரை மாநகராட்சியின் புறநகர் பகுதிகளான விமான நிலையம் அமைந்துள்ள பெருங்குடி, எய்ம்ஸ் அமைய உள்ள தோப்பூர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நாகமலை புதுக்கோட்டை ஆகிய பகுதிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்படுமா? 


கே.என்.நேரு, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்: மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் எப்படி மாநகரத்தில் உள்ள மக்கள் என்னென்ன வசதி பெறுகிறார்களோ, அதை மதுரையை சுற்றியுள்ள மக்களும் பெறும் பணியை, நிதிநிலைமைக்கு ஏற்ப செய்து தரப்படும். 

மாநகராட்சி ஆகுமா ஆத்தூர் நகராட்சி?

ஆத்தூர் நகராட்சியில் 3.5 லட்சம் வாக்காளர்களையும், நரசிங்கபுரம் நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்காளர்களும் உள்ளனர். 6 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் இரண்டையும் இணைக்க முடியும். இரண்டு நகராட்சியிலுமே தேர்தல் நடைபெற்று புதிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். எனவே பதவிக்காலம் முடியும் போதுதான் மாநகராட்சியாக உயர்த்துவது குறித்து யோசிக்க முடியும் 

Background

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜிடம் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.