சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடப்பாண்டில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை, 25 சுகாதார நிலையங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.
தமிழகத்தில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும்.
புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூபாய் 1018.85 கோடி மதிப்பீட்டில் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூர், திருத்தணி, வள்ளியூர், திருப்பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் மற்றும் தென்காசி, குளித்தலை, திருச்செங்கோடு, அம்பாசமுத்திரம் மற்றும் இராஜபாளையம் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.
புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மன்னார்குடி, கும்பகோணம், சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகள், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார மையம் ஆகிய 10 இடங்களில் பன்றி காய்ச்சல், டெங்கு, எலி காய்ச்சல், சிக்குன்குனியா, நிபா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களை கண்டறிய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் புதிய RT-PCR பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம்-உத்திரமேரூர் அரசு தாலுக்கா மருத்துவமனை உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
தென்காசி மாவட்டம்-ஆலங்குளம் அரசு மருத்துவமனை ரூபாய் 10 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டம்-ஆவடி, திருப்பூர் மாவட்டம்-வேலம்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்-கண்டிகைபேரி, சேலம் மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 5.85 கோடி மதிப்பீட்டில் நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவமனைகளில், பச்சிளங்குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக, ஒலி புகா அறை மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய் 5 கோடி செலவில் வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம்-வந்தவாசி அரசு மருத்துவமனையில் மேம்பாட்டுப் பணிகள் ரூபாய் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்
செங்கல்பட்டு மாவட்டம்-செய்யூர் அரசு வட்ட மருத்துவமனை ரூபாய் 2.20 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உடற்கூறு திசுக்களை சுத்திகரிக்க நவீன காமா நுண்கதிர் அறை ரூபாய் 1.90 கோடி செலவில் கட்டப்படும்.
சென்னை-பெரியார் நகர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நீலகிரி மாவட்டம்-கோத்தகிரி, அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 1.44 கோடி மதிப்பீட்டில் தேவையான கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கி 3 இரத்த வங்கிகள் அமைக்கப்படும்.
சேலம் மாவட்டம்-ஏற்காடு அரசு மருத்துவ மனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.05 கோடி மதிப்பீட்டில் நவீன பிரேத பரிசோதனை கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம்-களக்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிறப்புச் சிகிச்சை வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 125 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.
கோயம்புத்தூர், மதுரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 110 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை, விபத்து காய சிகிச்சை பிரிவு, தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ், இரத்த வங்கி போன்ற சேவைகள் வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 71.81 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
சென்னை-ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக, நவீன உபகரணங்களுடன் புதிய நரம்பியல் பிரிவு கட்டடம் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த, கேத்லேப் (cathlab) கருவிகள் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் [MRI] ரூபாய் 8.5 கோடி செலவில் வழங்கப்படும்.
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் நடமாடும் இரத்த சேமிப்பு வாகனம், HPLC கருவி மற்றும் வேதியியல் பொருட்கள் வழங்கப்படும்.
இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும்-48 திட்டத்தினை மேலும் வலுப்படுத்த செங்கல்பட்டு, தருமபுரி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும் ஒட்டன்சத்திரம், சீர்காழி, மேலூர், ஊத்தங்கரை ஆகிய 4 அரசு மருத்துவ மனைகளிலும் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (Critical Care Blocks) ரூபாய் 237.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் தென் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை புதியதாக ரூபாய் 60.05 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ் கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி கொண்ட புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு ரூபாய் 40.05 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும்-48 திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் அவசர சிகிச்சை உரிய நேரத்தில் வழங்கிட 7 அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 14.70 கோடி மதிப்பீட்டில் புதிய சி.டி ஸ்கேன் (CT Scan) கருவிகள் வழங்கப்படும்.
சிவகங்கை மாவட்டம்-திருப்பத்தூர், விருதுநகர் மாவட்டம்-சாத்தூர், கடலூர் மாவட்டம் விருதாச்சலம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தருமபுரி மாவட்டம்- பாலக்கோடு ஆகிய அரசு மருத்துவமனைகளில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 11.62 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வாழப்பாடி, சங்ககிரி, பவானி, மேட்டுப்பாளையம் மற்றும் பொன்னேரி மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு, நவீன உபகரணங்கள் ரூபாய் 2.76 கோடி செலவில் வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டம்-அரூர் மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 2.30 கோடி மதிப்பீட்டில் சி.டி. ஸ்கேன் மற்றும் C-arm உடன் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேசை (Fracture Table) வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில், விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றம் செய்ய புதிய மென்பொருள் (Trauma Registry software) ரூபாய் 2 கோடி செலவில் உருவாக்கப்படும்.
இராமநாதபுரம் மாவட்டம்-பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் C-arm உடன் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேசை (Fracture Table) வழங்கப்படும்.
வட்டார அளவிலானா பொது சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தும் விதமாக 178 வட்டாரங்களில் புதியதாக வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான (BIock Level Public Health Units) புதிய கட்டடங்கள் ரூபாய் 143.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வலிமைபடுத்தப்படும்.
ஊரக பகுதிகளில் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வரும் 316 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கட்டடங்கள் ரூபாய் 102.61 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஊரக பகுதிகளில் செயல்படும் 48 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 39.80 கோடி மதிப்பீட்டில் 15-வது நிதிக் குழு நிதியில் கட்டப்படும்.
கிராமப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் நிறுவப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் மற்றும் இடைக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம்-மைலம், ஈரோடு மாவட்டம்-மொடக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்-கரிசல்பட்டி மற்றும் இராமநாதபுரம் மாவட்டம்-ஆர்.எஸ்.மங்களம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 14.21 கோடி செலவில் நவீன உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியருக்கான குடியிருப்புகள் ரூபாய் 2 கோடி செலவில் புதியதாக தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.
400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் சுற்றுச்சூழல் நிறைந்த ஒளிர்மிகு ஆரம்ப சுகாதார நிலையங்களாக அழகுபடுத்தப்படும்.
4 கோடி செலவில் பசுமையான இயற்கை 400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் சுற்றுச்சூழல் நிறைந்த ஒளிர்மிகு ஆரம்ப சுகாதார நிலையங்களாக அழகுபடுத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம்-காரையூர் மற்றும் புதுநகர், சிவகங்கை மாவட்டம்-பூவந்தி, விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் ஜமீன் கொல்லன்கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் மங்களம், தூத்துக்கும் மாவட்டம்-புதுக்கோட்டை மற்றும் தென்காசி மாவட்டம்-செங்கோட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் இரத்த சேமிப்பு அலகு நிறுவப்படும்.
பத்தமடை பிரதான / மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு ரூபாய் 60 இலட்சம் செலவில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும். திட்டப் பணிகளில் பணியாற்றும் 114 மருத்துவ நல அலுவலர் பணியிடங்களாக ரூபாய் 25 இலட்சம் செலவில் தரம் உயர்த்தப்படும்.
தேனி மாவட்டம்-இராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர இலவச சிகிச்சை வழங்கும் பொருட்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு அமைக்கப்படும்.
இராமநாதபுரம் மாவட்டம்-உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை மேசை (Hydraulic Type) வழங்கப்படும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணி முதல் செய்யப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.