சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்றைய விவாதத்தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்படி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோடநாடு தொடர்பாக என்ன நோக்கத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். 




இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தின் வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


அதன் பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது:


எங்களை அச்சுறுத்த ஜனநாயக விரோத நடவடிக்கையில் திமுக ஈடுபடுகிறது. எப்படியாவது பொய் வழக்கு போட்டு எங்களை நசுக்க வேண்டும் என்று செயல்படுகிறார் ஸ்டாலின். நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி நாடுவோம். அனைத்தும் பொய் வழக்கு என்பது மக்களுக்கு தெரியும். இன்றும், நாளையும் சட்டமன்ற கூட்டத் தொடரை அதிமுக புறக்கணிக்கும். அராஜக திமுக அரசு எடுத்திருக்கும் வன்முறையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு இருக்கும். 


தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது:


ஜெ., கோடநாடு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அங்கு கொள்ளை முயற்சி நடக்கும் போது காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. வழக்கு முடியும் நிலையில் உள்ள போது, திட்டமிட்டு திமுக அரசு சயன் என்பவருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றதாக செய்தி வந்துள்ளது. அதில் என்னையும் சிலரையும் சேர்த்திருப்பதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே புலன்விசாரணை செய்யப்பட்டு, வரும் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு வருகிறது. முடியும் தருவாயில் உள்ள வழக்கை, வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை அச்சுறுத்தப்பார்க்கின்றனர். கோடநாடு குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர். திமுக வழக்கறிஞர் இளங்கோ தான் குற்றவாளிகளுக்கு ஆஜரானார். ஊட்டி நீதிமன்றத்திலும் திமுக வழக்கறிஞர்கள் தான் ஆஜராகினர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாறுபட்ட மூன்று நீதிபதிகள், மூன்று முறை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். உச்சநீதிமன்றத்தில் திமுக தூண்டுதலில் வழக்கு சென்று, அங்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆஜரானவர்கள், தற்போது அரசு வழக்கறிஞர்களாக அவர்களுக்கு ஆதரவாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2020ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழக்கியுள்ளது. நீதிபதி அனுமதி பெற்று தான் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை மீறி திமுக செயல்படுகிறது. என் மீதும், அமைச்சர்கள் மீதும் பழி சுமத்த திமுக இந்த ஏற்பாட்டை செய்கிறது. அதிமுக இதற்கு பயப்படாது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அதை திசை திருப்ப எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் அதிமுக அனைத்தையும் முறியடிப்போம். குற்றவாளிகளை பாதுகாத்து துணை போகும் இந்த அரசாங்கம் எப்படி மக்களை பாதுகாக்கும்,  என பேசினார்.