TN Railway Projects:  திண்டிவனம் - திருவண்னாமலலை, ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை போன்ற திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் பட்ஜெட்டில் வரும் 2026-27 நிதியாண்டில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள, ரயில்வே திட்டங்களுக்காக 7 ஆயிரத்து 611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு 2025-26 நிதியாண்டிற்கு 6 ஆயிரத்து 662 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக சுமார் ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதோடு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ள பல திட்டங்கள் உயிர் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 35 ஆயிரத்து 701 கோடி ரூபாய் மதிப்பிலான இருப்பு பாதை அமைப்பது, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டின் போக்குவரத்து சேவை கட்டமைப்பில் ரயில்வே சேவையின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க உள்ளது.

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள்

மத்திய அரசின் பட்ஜெட்டில் சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஐதராபாத் என இரண்டு அதிவேக ரயில் வழித்தடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டங்கள் மூன்று பிரதான நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த உள்ளது. 88 கிலோ மீட்டர் தூரத்திற்கான அத்திப்பட்டு - புத்தூர் மற்றும் 41 கிலோ மீட்டர் தூரத்திற்கான மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை திட்டங்களுக்கு, மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிர்பெறும் திட்டங்கள்:

மேற்குறிப்பிடப்பட்ட புதிய திட்டங்கள் மட்டுமின்றி, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று தொடங்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில திட்டங்களையும் மீண்டும் தொடங்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டை மற்றும் திண்டிவனம் - திருவண்ணாமலை தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, தெற்கு ரயில்வேயின் கட்டுமான அமைப்பு/எழும்பூர் தலைமை நிர்வாக அதிகாரி சுசில் குமார் மவுரியா தெரிவித்துள்ளார். இதுபோக சென்னை - கடலூர் இடையேயான திட்டமும் மீண்டும் பரிசீலனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாம்.

20 ஆண்டுகால காத்திருப்பு

திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில்பாதை திட்டமானது சுமார் 70 முதல் 71 கிலோ மீட்டர் நீளத்திற்கானதாகும். தெற்கு ரயில்வேயின் இந்த உட்கட்டமைப்பு திட்டமானது சுமார் 20 ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ளது.  திண்டிவனம், செஞ்சி மற்றும் திருவண்ணாமலையை இணைக்க இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2011 இல் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்கள் அடுத்தகட்டத்தை நோக்கி நகராமலேயே உள்ளது. இந்நிலையில் தான் இந்த திட்டத்த்தை மீண்டும் பரிசீலிப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய சூழலில் விழுப்புரம் சந்திப்பு வழியாக இயக்கப்படும் திண்டிவனம் - திருவண்ணாமலை இடையேயான ரயிலானது 18 நிறுத்தங்களில் நின்று, சுமார் 105 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இலக்கை அடைய வேண்டியுள்ளது. புதிய திட்டம் அமலுக்கு வந்தால், வெறும் 70 கிலோ மீட்டர் மட்டுமே பயணித்து இலக்கை அடைய முடியும். மேலும் சென்னை மற்றும் திருவண்ணாமலை இடையேயான இணைப்பு மேலும் அதிகரிக்கும். மேலும், திண்டிவனத்தில் இருந்து ஆரணி மற்றும் நகரி போன்ற பகுதிகளுக்கான இணைப்பையும் மேம்படுத்தக்கூடும்.

ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டை

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் சேவை திட்டமானது, மத்திய அரசின் பட்ஜெட்டிற்குப் பிறகு மீண்டும் தீவிரப் பரிசீலனைக்கு வந்துள்ளது.  சென்னையின் வடமேற்குப் பகுதிகளையும் (ஆவடி), தெற்குப் புறநகர்ப் பகுதிகளையும் (கூடுவாஞ்சேரி) இணைப்பது திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை போன்ற தொழில் மண்டலங்களுக்குச் சரக்கு மற்றும் பொதுமக்கள் பயணத்தை எளிதாக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக 58 கிலோ மீட்டர் நீளத்திற்கான இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி இடையிலான 32 - 34 கி.மீ தூரப் பாதைக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  முழுத் திட்டத்திற்கும் சுமார் 3 ஆயிரத்து136 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆவடி, வயலநல்லூர், திருமழிசை தண்டலம், ஸ்ரீபெரும்புதூர், வல்லக்கோட்டை, ஒரகடம், நட்டாரசன்பேட்டை மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.  கூடுதலாக இத்திட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்குச் செல்வதற்கும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

சென்னை - கடலூர் வழித்தடம்

சென்னையிலிருந்து கடலூர் வழியான ரயில் சேவை தொடர்பான அறிவிப்பானது, கடந்த 2008-2009 பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்தது. சுமார் 2 ஆயிரத்து 670 கோடி ரூபாய் செலவில் 180 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த திட்டமானது, மகாபலிபுரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி வழியாக திட்டமிடப்பட்டது. ஆனால், நிலம் கையக்ப்படுதுதல் மற்றும் திட்டத்தை மறுவடிவமைப்பு செய்யக்கோரி புதுச்சேரி அரசு முன்வைத்த கோரிக்கையால் தற்போது வரை முடங்கிக் கிடக்கிறது. இந்த திட்டமும் மீண்டும் பரிசீலனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் கடற்கரை பகுதிகளை ஒட்டிய சென்னை மற்றும் கடலூர் வரையிலான வழித்தடத்தில் சுற்றுலா மற்றும் தொழில்துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.