17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராக காவல் ஆய்வாளருக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017 ஆண்டு திருவாரூர் மாவட்டம் வேளூரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். அங்குள்ள மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி விடுமுறை நாட்களில் திருப்பூரில் உள்ள சித்தப்பா பாண்டி வீட்டுக்கு சென்று திரும்புவார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரோடு மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதே வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். பள்ளிக்கு சென்ற மாணவியை செல்வம் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று, பலமுறை பலவந்தப்படுத்தி உறவு கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலை போளூர் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் இருவருக்கும், செல்வம் தரப்பினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாக செல்வத்திடம் மாணவி தெரிவித்துள்ளார்.
கர்ப்பபை அகற்றம்
இதையடுத்து அவரது கர்ப்பத்தை கலைக்கும் முயற்சியில் மாணவியை அடித்து வயிற்றில் தாக்கியுள்ளனர். இதனால் மயங்கிய மாணவி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்து உரிய சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து மாணவி திருப்பூரில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்ற போது, அங்கு அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக ஸ்கேன் பரிசோதனையில் செய்ததில் மாணவியின் கர்ப்பபை அகற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் அதிர்ந்த மாணவி தரப்பினர் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்போது வழக்கு தொடர்பாக எப்,ஐ,ஆர். பதிவு செய்த உதவி ஆய்வாளர் கமல்ராஜ், தற்போது பதவி உயர்வில் சீர்காழியில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு தற்போது திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சாட்சி கூற ஆய்வாளர் கமல்ராஜூக்கு 15 முறை நீதிமன்றம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் நீதிமன்றத்து வரவில்லை.
இறுதியாக சம்மனில் அவர் கையெழுத்திட்ட பிறகும் கூட ஆஜராகவில்லை. இதையடுத்து மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் ஆய்வாளர் கமல்ராஜூக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.