திருவாரூர் மாவட்டத்தில் உர விற்பனையில் குளறுபடி செய்த 84 தனியார் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 36 கடைகளின் உரிமத்தை ரத்து செய்து வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி மும்மரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தொடக்க வேளாண்மை நிலையங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவதால் இதனை பயன்படுத்தி தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்த நிலையில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் உரக்கடைகளை சோதனை செய்து உரத் தட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் உரத்தை வைத்துக் கொண்டே செயற்கையாக உரத்தட்டுப்பாடை ஏற்படுத்தியது, உர விற்பனை பதிவேடுகளை சரிவர பராமரிக்காதது அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு உரத்தை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆய்வு செய்தனர். அதில். நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் திருவாரூர் நன்னிலம் மன்னார்குடி பகுதிகளில் உர விற்பனை செய்வதில் செயற்கை தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 48 தனியார் உரைக்கடைகளுக்கு உர விற்பனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 36 தனியார் கடைகள் உரம் விற்பனை செய்யாமலேயே உரக்கடை என பெயர் வைத்து நடத்தி வந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 28 கடைகளுக்கு விளக்கம் கேட்டு வேளாண்மை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
குறிப்பாக தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு உர விற்பனை செய்வது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை இணை இயக்குனர் பால சரஸ்வதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.