திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஆரம்ப விழா இன்று தொடங்குகிறது. இதனால் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். 


கார்த்திகை மாதம் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. எப்படி இந்த மாதம் சபரிமலை சீசன் என சொல்லப்படுகிறதோ, அதற்கு ஈடாக திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அருணாசலேஸ்வரர் கோயில் இந்தாண்டுக்கான கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


நடப்பாண்டில் திருக்கார்த்திகை வரும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை கோயிலில் எப்போதும் 10 நாட்கள் தீபத்திருவிழா நடைபெறும். அதன்படி நவம்பர் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழாவானது தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 23 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. நவம்பர் 26 ஆம் தேதி நிறைவு நாளன்று பரணி தீபமானது 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்படும். 


அதேசமயம் கொடியேற்றத்துக்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்வசத்துடன் தான் தீபத்திருவிழா தொடங்கும். அதன்படி இன்று (நவம்பர் 14) இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (நவம்பர் 15) புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோயிலின் 3வது பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். வரும் நவம்பர் 16 ஆம் தேதி விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். 


வரும் 26 ஆம் தேதி அதிகாலை 4  மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் விழாவுக்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் கோயில் நிர்வாகம் தலைமையில் நடைபெற்று வருகிறது.