கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை ஏற்றப்பட்டது.


தீபாவளி பண்டிகைக்குப் பிறகு அனைத்து மக்களாலும் விமரிசையாக கொண்டாடப்படும் திருக்கார்த்திகை திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் உலக பிரசித்தி  பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா மிக முக்கியமானது. இந்த கோயிலில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி  காலை கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா  தொடங்கி விமர்சையாக நடைபெற்று வந்தது. 


பத்து நாட்கள்  நடைபெற்று வந்த இந்த விழாவில் காலை உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோன்று இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


விழாவின் முக்கிய விழாவான 10  நாள் திருவிழா இன்று அதிகாலை சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தின் கருவரை முன்பு உள்ள பிரதோஷ நந்தி சிலை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பரணி தீபத்தை சிவாச்சாரியார் சரவணன் ஏற்றினார்.


இந்த பரணி தீபம் என்பது ஏகன் அனேகன் ஆகி அனேகன் ஏகேன் ஆகும்  தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு தீபம் ஏற்றப்பட்டது. பிரதோஷ நந்தி சிலை அருகில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்கை சிவாச்சாரியார் திவாகர் கையில் ஏந்தியவாறு இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் வைகுந்த வாயில் வழியாக அண்ணாமலையார் மலை உச்சிக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. 






அதனைத் தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள உண்ணாமுலை அம்மனுக்கு ஆராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் உள்ள விநாயகர், முருகர் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் திருக்கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆராதனையானது காண்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,உயர் நீதிமன்றம் நீதிபதி மகாதேவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று மாலை 6 மணியளவில் கோவின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார்  மலை மீது மகா தீபம்  ஏற்றப்படும். இந்த விழாவில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


சிறப்பு பேருந்துகள்:


மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியானது. பக்தர்களின் வருகையைப் பொறுத்து பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், விழுப்புரத்தில் இருந்து இன்று முதல் மூன்று நாள்களுக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும் புதுச்சேரியில் இருந்து 180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருக்கோவிலூரில் இருந்து 115 சிறப்பு பேருந்துகள், கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 


மேலும் திருவண்ணாமலைக்கு தாம்பரம், சென்னை கடற்கரை, மதுரை, திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில்  காவல்துறையினர் 9ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.