விழுப்புரம் : திருவண்ணாமலையில் பரணி தீபம் அன்று கிரிவலப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு லட்டுவை பிரசாதமாக வழங்க குமாரகுப்பம் கிராம மக்கள் 50 ஆயிரம் லட்டு தயார் செய்துவருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழா Karthigai Deepam 2025
உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நாளை மறுதினம் டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்தினை காண்பதற்கு லட்சகணக்கானோர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபத்தை காண்பதினால் மோட்சம் கிட்டும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
50 ஆயிரம் லட்டு தயாரிப்பு
திருவண்ணாமலையில் நடைபெறும் பரணி தீபத்தின் போது கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமாரகுப்பம் கிராமத்தை சார்ந்த கிராம மக்கள் லட்டுவை செய்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் 22 வது ஆண்டாக 50 ஆயிரம் லட்டு பக்தர்களுக்கு வழங்க வழங்க கிராம மக்கள் லட்டு பிரசாதத்தினை தயார் செய்துள்ளனர். லட்டு பிரசாதம் செய்து கிரிவலப்பாதையில் வருபவர்களுக்கு கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் நன்மை கிடைப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி (03-12-2025) கார்த்திகை தீபம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. நினைத்தாலே முக்தி தரும், திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குவதால், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவின் நாள் அன்று, ஏராளமான பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24 தற்காலிக பேருந்து நிலையங்கள்
பக்தர்களின் வசதிக்காக நகரங்களை இணைக்கக்கூடிய 9 சாலைகளிலும், 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதோடு, அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகின்றது. சுமார் 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் காவலர்கள்
இதற்காக கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில், மும்மரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், 5 டிஐஜி, 43 எஸ்பி உள்ளிட்ட 15 ஆயிரம் போலீசார் திருக்கோவில், மாடவீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1,060 சிசிடிவி கேமிராக்கள்
அண்ணாமலையார் கோவிலுக்குள் இலவச தரிசன க்யூ லைன், சிறப்பு தரிசன க்யூ லைன் உள்ளிட்ட 114 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாநகரம் கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 1,060 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.