திருவண்ணாமலையில் வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கிரிவலம் நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 01 மற்றும் ஆகஸ்ட் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கும், ஆகஸ்ட் 2-ஆம் தேதி மறு மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கும் இந்த பேருந்துகள் புறப்படும். பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய கைப்பேசி எண் 9445014452 ,தலைமையக கைப்பேசி எண் 9445014463, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


 




மேலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகின்ற பௌர்ணமி தினத்தன்று வெளிநாடுகளிருந்தும், வெளிமாநிலங்கலிருந்தும், அனைத்து மாவட்டங்களிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளார்கள். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், 01.08.2023 (செவ்வாய் கிழமை) மற்றும் 02.08.2023 (புதன் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அனைத்து துறை அலுவர்களும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். ஏற்கனவே பௌர்ணமி அன்று வருகை தந்த பக்தர்களை விட இந்த பௌர்ணமிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. எனவே இந்த முறை முதல்நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கபடும் பணிகளை தோய்வின்றி சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். பௌர்ணமி தினத்தன்று 01.08.2023 (செவ்வாய் கிழமை) காலை 5 மணிக்கு நடை திறக்ப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். பௌர்ணமி தினத்தன்று சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நகரத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகமான தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த வேண்டும். வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அமைப்பவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலமாக தடையில்லாத மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 




உணவு பாதுகாப்பு துறை மூலமாக அன்னதானம் வழங்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்.மேலும் ஏற்கனவே அன்னதானம் வழங்கிய இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்க வேண்டும். சுகாதார துறை மூலம் அதிக மருத்துவ முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே கிரிவளப்பாதையை சுற்றி உள்ள 14 கி.மீ. தூரத்தை தூய்மையாக வைத்திருக்கு 1 கி.மீ. தூரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் அனைத்துறை துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து குழு அமைக்கபட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், ஊரக வளர்ச்சி துறை மூலமாக காவல் துறை பாதுகாப்பு பணி மேற்கொள்ள உயர்மட்ட கோபுரம் அமைத்து தா வேண்டும், காவல்துறை மூலம் 14 கி.மீ. கிரிவலப்பாதையை சுற்றி சாலையின் முக்கிய பகுதிகள் மற்றும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.  கோயில் நிர்வாக அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் அனுமதி அடையாள அட்டை அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார்.