Tiruvallur News: சிகரெட் கடத்தல், இருசக்கர வாகன விபத்தில் மரணம் - பரபரப்பு தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய செய்திகளை கீழே காணலாம்.

தனியார் பேருந்தில் சிகரெட் கடத்தல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் மாநில எல்லையோர சோதனைச் சாவடி உள்ளது. போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தை சோதனையிட்டனர். அதில் பயணித்த திருத்தணியைச் சேர்ந்த நாகபூஷணம் ( வயது 38 ) ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த உமர் ( வயது 32 ) ஆகியோர் எந்த ஆவணமும் இன்றி, 5,750 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தியது தெரிய வந்தது. இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய். இவற்றை பறிமுதல் செய்த போலீசார், சென்னை வணிக வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்ட இருவரிடமும் வணிக வரித் துறையினர் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வர வழைத்து, அங்கிருந்து பேருந்தில் சென்னைக்கு எடுத்து செல்ல முயன்றது தெரிய வந்தது.
எதிர் எதிரே மோதிய இரு சக்கர வாகனங்கள் - இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
ஆந்திராவைச் சேர்ந்தவர் தினேஷ் ( வயது 27 ) தனியார் நிறுவன ஊழியர். இவர் திருத்தணி அடுத்த மங்காபுரம் காலனியைச் சேர்ந்த எழிலரசி ( வயது 24 ) என்பவரை திருமணம் செய்து, அங்கேயே வசித்து வருகிறார். நேற்று இரவு மணிக்கு தினேஷ் , மங்காபுரம் காலனியைச் சேர்ந்த ஆகாஷ் ( வயது 21 ) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் மத்தூர் ரயில்வே கேட் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். மத்துார் தனியார் பைப் கம்பெனி அருகே சென்ற போது , எதிரே வந்த மத்துார் பெரியார் நகரைச் சேர்ந்த கோவிந்தன் ( வயது 27 ) என்பவரது பைக் நேருக்கு நேராக மோதியது. இதில் தினேஷ் , கோவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆகாஷ் ( வயது 21 ) மற்றும் சாலையோரம் நடந்து சென்ற தடுக்குப்பேட்டையைச் சேர்ந்த முனிரத்தினம் ( வயது 66 ) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
" பெற்றோர்கள் திட்டுவார்கள் " என பயந்து , பூங்காவில் சுற்றிய மாணவர்கள் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவில்பதாகை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 32 ) தோட்ட தொழிலாளி. அவரது மகன் சாரதி ( வயது 13 ) அரசு பள்ளியில் 8 - ம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் கோவில் பதாகை குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் பாபு ( வயது 33 ) மாநகராட்சி தூய்மை பணியாளர். அவரது மகன்கள் ஹரிஷ் ( வயது13 ) ரூபன் ( வயது 11 ) ஆகியோர் 8 ம், 6 ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 5 ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சாரதி. ஹரிஷ், ரூபன் மூவரும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளனர். நேரம் போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுவர்கள் வீட்டுக்கு செல்லாமல் , அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் , ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து சிறுவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆவடி எச்.வி.எப் எஸ்டேட்டில் உள்ள அர்ஜுன் பார்க்கில் மூவரும் சுற்றித் திரிவது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று மூன்று சிறுவர்களையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.





















