தமிழ்நாட்டில் சமீபகாலமாக சிறுத்தைகள் நடமாட்டம் வழக்கத்திற்கு மாறான பகுதிகளில் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று சிறுத்தை ஒன்று திடீரென சிக்கியது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கார் ஷெட்டில் சிறுத்தை ஒன்று திடீரென உள்ளே புகுந்தது. அந்த கார் ஷெட்டில் இருந்த 5 பேர் அங்கிருந்த 2 காருக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  சிறுத்தையை பிடிக்கும் அனைத்து முயற்சியிலும் மாவட்ட வனத்துறையினர் 50 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் கூடிய சீக்கிரத்தில் சிறுதையை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒரு முதியவரை சிறுத்தை தாக்கி உள்ளது எனவும், மேலும் அவருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க ஆய்வு செய்யப்படும் எனவும் கலெக்டர் கூறினார். மேலும் சிறுத்தையை பிடிக்க முயற்சி ஈடுபட்டு வருகின்றோம் பின்னரே சிறுத்தை எங்கிருந்து வந்தது எனவும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.


மேலும், திருப்பத்தூரில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளும் எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இந்நிலையில் சிறுத்தைக்கு பயந்து கார் ஷெட்டில் 2 காரில் சிக்கி தவித்த 5 பேரையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.