புதிய வீடு கட்ட தோண்டியபோது 18-ம் நூற்றாண்டு வெண்கல முருகன் சிலை கண்டுபிடிப்பு - எங்கு தெரியுமா?
சுமார் 6 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் 7 இன்ச் பழமை வாய்ந்த வெண்கல முருகர் சிலை கிடைத்துள்ளது.

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே புதியவீடு கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 18ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட 7இன்ச் அளவிலான வெண்கல முருகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பாறை வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (41). இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். மேலும் திருப்பதி அவருடைய நிலத்தில் புதியவீடு கட்டுவதற்காக பணி தொடங்கப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோன்டியுள்ளார்.

அப்போது சுமார் 6 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் 7 இன்ச் பழமை வாய்ந்த வெண்கல முருகர் சிலை கிடைத்துள்ளது. பின்னர் உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாட்றம்பள்ளி வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் காஞ்சனாவிடம் 7 இன்ச் அளவிலான வெண்கல முருகர் சிலையை திருப்பதியின் மனைவி ஒப்படைத்தார். அதனைதொடர்ந்து முருகர் சிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட போது அந்த சிலை 18ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் புதியவீடு கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது 7 இன்ச் அளவிலான பழமை வாய்ந்த முருகர் சிலை கிடைத்தது அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.





















