திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் சமத்துவ கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 101-ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பிரச்சார பிரிவு இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் அணுசக்தி நாயகன் வாஜ்பாய் அவர்களுக்கு பிறந்தநாள் விழா மிகக் கோலாகாலமாக கொண்டாடப்பட்டது.
அப்போது மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சமத்துவ கிறிஸ்துவ கேக்கை, சிவன் வேடமணிந்த நபரும் அதேபோல இஸ்லாமிய பெண் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆகியோர் இணைந்து வெட்டினர். அதன் பின்னர் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கேக்கை ஊட்டி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் பூபதி, திருப்பத்தூர் மாவட்ட பொதுச் செயலாளர் ஈஸ்வர், கந்திலி மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற பொதுமக்களுக்கு மதிய உணவும் அளிக்கப்பட்டது.