திருப்பதி லட்டு விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்டிருந்த பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக ஆந்திர பிரதேச டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பெரும் பாரம்பரியத்தை கொண்ட திருப்பதி லட்டு பிரசாதத்தை சுற்றி தற்போது, பூதாகரமான சர்ச்சை வெடித்தது. பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.


பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நெருக்கடி:


முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே இதற்கு காரணம் என சாடியிருந்தார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளியான ஆய்வில் லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 


இப்படிப்பட்ட சூழலில், திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கோபி, சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் சேனல் ட்ரோல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே வீடியோ பயங்கர வைரலானது. ஆனால், வீடியோவை பரிதாபங்கள் யூடியூப் சேனலே திடீரென நீக்கியது.


சிலர் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ இருந்ததாக புகார் எழுந்ததால் அதை நீக்கியதாக பரிதாபங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக ஆந்திர பிரதேச டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


ஆந்திராவுக்கு பறந்த புகார்:


எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பாஜக நிர்வாக அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட தகவலில், "பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவின் அனுமதியை தொடர்ந்து, "Ladoo Pavangal" என்ற தலைப்பிலான அவதூறான வீடியோ வெளியிட்டதற்காக பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி, ஆந்திரப் பிரதேச டிஜிபியிடம் முறையான புகார் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன்.


இணையத்தில் அவர்கள் வீடியோவை அகற்றியிருந்தாலும், வீடியோ இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பது மட்டுமல்லாமல், சமூகங்களுக்கு இடையே பகையை பரப்பும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டும் வகையிலும் இருந்தது.


 






அதோடு, முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்பட பொறுப்பான அரசு பதவிகளில் உள்ள நபர்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. இந்த பிரச்சினையில் விரைவான மற்றும் நேர்மறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.