திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்த பிரபஞ்சன் என்பவர் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தன்னிடம் ரூ.50 லட்சம் அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய உறவினருக்காக அங்கன்வாடி பணி வேண்டி மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமரிடம் அலுவலகத்துக்குச் சென்று பணி கேட்டேன். வீட்டிற்கு வாங்க பேசிக் கொள்ளலாம் என்று சொன்னார், நாங்கள் வீட்டிற்கு சென்றிருந்தோம். கொஞ்சம் அப்ளிகேஷனை கொடுத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் பணியாளர்களுக்கு பரிந்துரை செய்து தரச் சொல்லி கூறி இருந்தார்.
வேலைக்காக முன்பணம் வாங்கிக்கொண்டு வந்து தாருங்கள் என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்களை என்னிடம் வழங்கினார். மேலும் ஒரு லட்சத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 50 பேரிடம் ரூ.50 லட்சம் வசூல் பண்ணி செந்தில் குமாரிடம் கொடுத்தேன்.
ஆனால் நான் பணம் வாங்கி கொடுத்த நபர் எவருக்குமே பணி வழங்கவில்லை. மேலும் எனக்கு கமிஷன் காசும் தரல ரூ.50 லட்சத்தையும் திருப்பி தரல மேலும் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் எல்லாம் என்னிடம் பணி வாங்கித்தா என கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து செந்தில்குமரிடம் கேட்டால் வரும் டிசம்பரில் அனைவருக்கும் போஸ்டிங் போடுவாங்க அப்போது பணி வாங்கித் தருகிறேன் என ஏமாற்றி வருகிறார். மேலும், என்னை எதுவும் செய்ய முடியாது மாவட்ட ஆட்சியரை நாங்கள் என்ன சொல்றோமோ, அது தான் கேட்பாங்க என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரே பணத்துக்காக ஏஜென்ட் வைத்து ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியரே நான் சொல்வதைக் கேட்பார்கள் எனக் கூறி தில்லாலங்கடி செயலில் ஈடுபட்ட இவர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.