இறந்தவரின் உடலை நள்ளிரவில்  டார்ச் லைட் அடித்து, 7 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான சாலையில் டோலி கட்டி தூக்கிச்சென்ற அவல நிலை அரங்கேறியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமமான நெக்னாமலை மலைகிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று, நெக்னாமலை மலைகிராமத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரம் மலைச்சாலையில் நடந்தே வந்து, வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சென்ற போது, மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்ப்படுத்தியது.

டோலியில்  தூக்கி சென்ற அவலம்:

அதனை தொடர்ந்து, கோவிந்தனின் உறவினர்கள், நெக்னாமலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் மேற்க்கொண்டு, நெக்னாமலை அடிவாரத்தில், கோவிந்தனின் உடலை டோலி கட்டிக்கொண்டு இறுதி சடங்குகள் செய்து, நள்ளிரவில், டார்ச், லைட் அடித்து, 7 கிலோ மீட்டர்  கரடுமுரடான மலைச்சாலையிலேயே நள்ளிரவில் ஆண்கள், பெண்கள் என பலர் கோவிந்தனின் உடலை சுமந்து சென்றனர்.

சேதமடைந்த மண் சாலை:

நெக்னாமலை மலைகிராமத்திற்கு சாலை வசதி வேண்டி மலைகிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி, மலைகிராம மக்களே, தற்காலிகமாக மண் சாலை அமைத்த நிலையில், கடும் மழை மற்றும் இயற்கை சீற்றத்தினால், மலைச்சாலையில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக இருக்கும் நிலையில், மலைக்கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவர்கள்,  தங்கள்  கடும் அவதியடைந்து வந்த நிலையில், சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராம மக்களுக்காக, அவசர தேவைக்கு, இலவசமாக  ஆம்புலன்ஸ் வழங்கிய நிலையில், தற்போது மலைச்சாலை மிகவும் மோசமான நிலையில், உள்ளதால், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Toll plaza: விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை; புதிய சுங்கச்சாவடி வசூல் தொடங்கியது - கட்டண விவரம் இதோ

நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:

மேலும் நெக்னாமலை மலைகிராமத்திற்கு, சாலை வேண்டி, மலைகிராம மக்கள் அனைத்துதுறை அதிகாரிகளிடம் மனு  அளித்தும், ஆட்சியர் முதல் அமைச்சர் வரை மலைகிராமத்தில் ஆய்வு செய்தும்,  இதுவரையில், அதிகாரிகள், நெக்னாமலை மலைகிராமத்திற்கு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென மலைகிராம மக்கள் வேதனையுடம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று  உடல்நலக்குறைவால், முதியவர் ஒருவர் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆலங்காயம், பகுதியில், மருந்து கடையின் முன் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் முதியவர் ஒருவர், மருத்துவமனைக்கு சென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டுமென்பது நெக்னாமலை மலைகிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.