திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி வழியாக சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அதன்படி, இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி வழியாக சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06089) சென்னையில் இருந்து ஜூலை 6 அன்று இரவு 09.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். 

பின்பு அங்கிருந்து காலை 09.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06090) செங்கோட்டையிலிருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். 

பின்பு அங்கிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.05 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 18 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை 8 மணிக்கு துவங்குகிறது இனத்திற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம் :- 

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முருகனின் 2ஆம் படை வீடான, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதிவரை ( சென்னை, திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்ட்டினம்) ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கும் ஜூலை 7ஆம் தேதி அன்று திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து முன்பதிவு 

சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc official app செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.