Tindivanam - Nagari Rail Project: உயிர் பெற்ற திண்டிவனம் - நகரி ரயில் திட்டம்.. 347 கோடி ஒதுக்கீடு.. 30 ஆண்டுகால கனவு நினைவாகிறது..
Tindivanam to Nagari railway project ; "தமிழ்நாட்டில் மிக முக்கிய ரயில் திட்டமான திண்டிவனம் - வந்தவாசி -நகரி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது"

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக ஆந்திராவை இணைக்கும் வகையில் திண்டிவனம் -நகரி புதிய ரயில் பாதை திட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட, திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது. ஆனால் தொடர்ந்து முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது.
ரயில் பாதை செல்லும் வழி என்ன ? Tindivanam to Nagari Railway Project Route Map
திண்டிவனம் நகரி வரை சுமார் 180 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் பாதை திண்டிவனம், வெள்ளிமேடு பேட்டை, தெள்ளாறு, வந்தவாசி (மும்முனி) மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யார், இருகூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை வழியாக நகரி செல்கிறது.
மிக நீண்ட தூரமும் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடுத்தக்கது. குறிப்பாக வந்தவாசி மற்றும் செய்யாறு மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த திட்டம் பார்க்கப்பட்டது. செய்யார் - காஞ்சிபுரம் ரயில் பாதை திட்டம் அமைக்கப்படும்போது, இந்த ரயில் பாதையும் அமைக்கப்பட்டால் சென்னைக்கு செல்பவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ?
தொடர்ந்து நிதி பற்றாக்குறைய இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் 347 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் திட்டப்பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன.
தற்போது பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்தம் 1000 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு பட்ஜெட்டில் போதும் , குறைந்த நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. அதுவும் கடந்த 2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது, ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் பாதை அமைப்பது எப்போது ?
நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அவர்களுக்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு, அடுத்த கட்டப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















