விழுப்புரம் : திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் இல்லாமல் கட்டபடுவதாக கூறி நகரமன்றத்தில் இரண்டு நுழைவு வாயிலுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம், ஆனால் அரசு வெளியிட்ட பேருந்து நிலையத்தில் முன் வரைவு படத்தில் நுழைவாயில் வடிவமைப்பு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூபாய்.20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில், 3,110 ச.மீ பரப்பளவில் பேருந்து நிலையம் கட்டிடம், 3,338 ச.மீ பரப்பளவில் பேருந்து நிறுத்தங்கள், 1000 ச.மீ பரப்பளவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 300 ச.மீ பரப்பளவில் கட்டண கழிப்பறைகள் மற்றும் இலவச சிறுநீர் கழிப்பிடம், 300 ச.மீ பரப்பளவில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைய உள்ளது. எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்காக ஏக்கர் காலியிடம் 1 விடப்பட்டுள்ளது.




பேருந்து நிலைய வளாகத்தில், 50 பேருந்து நிறுத்தங்கள், 61 கடைகள், - 4 - தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம், 1 - சைவ உணவகம், 1 - அசைவ உணவகம், 1- பொருள்கள் வைப்பறை, 10 - காத்திருப்பு கூடம், 6 - நேரக்காப்பகம், 1 - காவல்துறை கட்டுப்பாட்டு அறை, 1 - நான் உங்களுக்கு உதவலாமா அறை, 1 - பேருந்து முன்பதிவறை, 1 இரயில் முன்பதிவறை, 1 -ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வறை, 2 தொகுதி மாற்றுத்திறனாளிகள் ஓய்வறை, 3 தொகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை, 1 - சுகாதார பிரிவு அலுவலகம், 2 - இலவச சிறுநீர் கழிப்பிடம், 1 - நிர்வாக அறை, 1- பதிவறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதியும் பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.


இந்த நிலையில், திண்டிவனம் நகர மன்ற கூட்டம், 31 தேதி அன்று மாலை 4:30 மணியளவில் நடந்தது. நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் கமிஷனர் (பொறுப்பு) ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது, நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் அவர்களின் கணவர் ரவிச்சந்திரன் பேசுகையில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு நுழைவாயில் இல்லாமல் வடிவம் அமைக்கப்பட்டதாகவும் இதனால் பேருந்து நிலையம் அழகு பெறாது என பேருந்து  நிலையத்தின் இரண்டு நுழைவு வாயிலுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் ரூபாய் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஒதுக்கும் தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 








தீர்மானமானத்தில் கூறியிருப்பதாவது....



  1. இந்நகராட்சியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய A வகைப்பாடு கொண்ட புதிய பேருந்து நிலையம் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் 3110 சதுர மீட்டர் பரப்பளவில் 50 பேருந்துகள் நிறுத்துமிடம், 60 கடைகள். 2 உணவகங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வறை, ஓட்டுநர், நடத்துநர் அறை, பாதுகாப்பு பெட்டக அறை, மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தற்பொது 75% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.


மேலும் இப்பேருந்து நிலையத்தில் நுழைவு வாயில் அமைப்பதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பீட்டில் வழி வகை செய்யப்படவில்லை எனவே, பேருந்து நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதியில் எழில்மிகு நுழைவு வாயில் அமைப்பதற்கு ஒரு நுழைவுவாயில் ஒன்றுக்கு ரூ.10.00 இலட்சம் வீதம் இரண்டு நுழைவு வாயிலுக்கு மதிப்பீட்டு தொகை ரூ.20.00 இலட்சம் நகராட்சி வருவாய் நிதியில் செலவினம் மேற்கொள்ள மன்ற அனுமதி வேண்டப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது. அலுவலக குறிப்பு:- மன்றம் அனுமதிக்கலாம். (5.5.6. 4206/2021/இ1)




இதுகுறித்து திண்டிவனம் நகராட்சி ஆணையர் பொறுப்பு ரமேஷ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது... நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, மேலும் இது குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.


திண்டிவனத்தில் 20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு நுழைவாயில் இல்லை என தவறான கருத்தை கூறி நகராட்சி நிதி கையாடல் செய்ய முயற்சிப்பதாகவும், அரசு வெளியிட்ட பேருந்து நிலையத்தில் வரைவு படத்தில் நுழைவாயில் வடிவமைப்பு இருக்கிறது, அதனை மறைத்து நகராட்சி நிதியை கையாடல் செய்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.