ஹரியானா ஏடிஎம் கொள்ளையர்களிடம் விடிய விடிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏற்கனவே கடந்த 2021-ல் கிருஷ்ணகிரியில் இதே கொள்ளை கும்பல் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையிடம் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பகீர் கிளப்பியுள்ளது.
திரிச்சூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை, வரிசையாக மூன்று ஏடிஎம்களில் 65 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, கண்டெயினர் லாரியில் கேரள பார்டரை கடந்து தமிழகம் வழியாக தப்பிச் செல்ல முயன்ற ஹரியானா கொள்ளையர்களை நாமக்கல்லில் தமிழ்நாடு போலீஸ் சுற்றி வளைத்து, விரட்டிப் பிடித்தனர்.
குறிப்பாக கேரளாவில் நடந்த கொள்ளை சம்பவத்தை காட்டிலும், நாமக்கல் நெடுஞ்சாலையில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு, சேசிங் சீன் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகம் வந்த கேரள, ஆந்திர போலிஸார்
இந்நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டதில் உயிரிழந்த நிலையில், ஒருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 5 கொள்ளையர்களிடம் தமிழ்நாடு போலீசார் விசாரணையை தொடங்கினர். நேற்று மதியம் கேரள போலீஸ் தமிழ்நாட்டுக்கு வந்து விசாரணையில் இணைந்த நிலையில், நேற்று இரவு ஆந்திர போலீசாரும் தமிழகம் விரைந்தனர்.
பிடிபட்ட 5 பேருக்குமே இந்தி மொழி மட்டுமே பேச தெரிந்ததால், காவல்துறையினர் மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகள் எல்லையான கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் இதே ஹரியானா கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்மையில், ஆந்திராவின் கடப்பாவிலும் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் இதே கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது.
கேரளாவைத் தேர்வு செய்தது ஏன்?
இப்படி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே கொள்ளையடித்து விட்டதால், அங்கே காவல்துறையினர் அலர்ட்டாக இருக்க வாய்பிருக்கக்கூடும், அதனால் இந்த முறை கேரளா சென்று கொள்ளையடிக்கலாம் என்று இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது.
அதற்காக 7 பேரு கொண்ட ஹரியான கொள்ளையர்கள் சென்னை வந்துள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் கண்டெயினர் லாரியில் டெல்லியிலிருந்து சென்னை வந்த நிலையில், இருவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளனர். மீதமுள்ள மூவர் கிரெட்டா காரில் சென்னை வந்துள்ளனர். கண்டெயினரில் வந்த சரக்குகளை மீனம்பாக்கம் அருகே அன்லோட் செய்துவிட்டு, சென்னையில் தங்கி தங்களுடைய கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளது இந்த கும்பல்.
2 மணி அளவில் களமிறங்கிய கும்பல்
இந்நிலையில் கேரளாவின் திரிச்சூரில் திருட முடிவு செய்தவர்கள் சென்னையிலிருந்து கண்டெயினர் லாரியில் கிரெட்டா காரை ஏற்றிவிட்டு, திரிச்சூர் சென்றுள்ளனர். திரிச்சூர் சென்றதும், முகமுடி அணிந்துகொண்டு, காஸ் கட்டிங் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு கிரெட்டா காரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கேரளாவில் 2 மணி அளவில் இறங்கியுள்ளது.
வழக்கமாகவே எஸ்.பி.ஐ ஏடிஎம்-மில் தான் எப்போதுமே அதிக பணம் இருக்கும் என்பதால், நெடுஞ்சாலையில் எஸ்பிஐ ஏடிஎம் எங்கெல்லாம் இருக்கிறது என்று கூகுள் மேப்பில் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.
தனித்தனியாக எஸ்கேப் ஆகத் திட்டம்
அதிகாலை 3 மணிக்கெல்லாம், வரிசையாக அடுத்த அடுத்த ஏடிஎம்களைச் சென்று கொள்ளையடித்துவிட்டு, காரை கண்டெய்னரில் ஏற்றிக்கொண்ட கொள்ளை கும்பல், தமிழகம் வழியாக சென்னை அல்லது பெங்களூரு வரை வந்து அங்கிருந்து இந்த பணத்தை ஆள் ஆளுக்கு பிரித்துக்கொண்டு, தனி தனியாக எஸ்கேப் ஆகி ஹரியானா செல்லத் திட்டமிட்டுள்ளது.
ஆனால் கேரளா போலீஸ் கொடுத்த அலர்ட், தமிழ்நாடு போலீசின் உடனடி நடவடிக்கையால் நாமக்கல்லில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 67 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணமும், கேஸ் வெல்டிங் இயந்திரமும் பறிமுதல் செய்யப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று மதியம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற தகவல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.