விழுப்புரம் : விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் அடுத்தடுத்து மூன்று கார்கள் மற்றும் ஒரு லாரி மோதிக்கொண்ட கொடூர விபத்தில் இரண்டு கார்கள் அப்பளம் போல் நொறுங்கின. கார்களில் இருந்த 'ஏர்பேக்' (Airbag) சரியான நேரத்தில் வேலை செய்ததால், அதில் பயணித்த மூன்று பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்தது எப்படி?
சென்னையைச் சேர்ந்த தமிழ்பிரகாசம் என்பவர் தனது காரில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கார் விழுப்புரம் அருகேயுள்ள பிடாகம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அவர் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக தமிழ்பிரகாசம் தனது காரை திடீரென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனால், அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த மேலும் இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவை கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
அப்பளம் போல் நொறுங்கிய கார்கள்:
இந்த சங்கிலித் தொடர் விபத்தில் மூன்று கார்களும் பலத்த சேதமடைந்து அப்பளம் போல் நொறுங்கின. அதில் ஒரு கார் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. கார்கள் இந்த அளவுக்கு மோசமாக நொறுங்கிய போதிலும், அதிர்ஷ்டவசமாக கார்களில் இருந்த பாதுகாப்பு அம்சமான 'ஏர்பேக்' உடனடியாகத் திறந்துகொண்டது.
இதன் காரணமாக, காரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த தமிழ்பிரகாசம், சசிதரன், சாமுவேல் ஆகிய மூவரும் பெரும் ஆபத்தின்றி லேசான காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினர்.
அரை மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து:
நெடுஞ்சாலையின் நடுவே இந்த விபத்து நடந்ததால், விழுப்புரம் - திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையிலேயே அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுக்கா போலீசார், விபத்துக்குள்ளான கார்களைப் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்துச் சீரமைக்கப்பட்டு வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
