விழுப்புரம் : மாநில அரசின் நிதியின் கீழ் இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் கூறிய நிலையில், டெல்லியில் ஸ்டாலின் மோடி சந்திப்புக்கு பிறகு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, திமுக பாஜக இடையே உறவு உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது என வல்லம் வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு. 


விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வல்லம் வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாடார்மங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக அவைத்தலைவர் கிருஷ்ணன் தலைமையிலும், ஒன்றிய கழக செயலாளர்  விநாயகமூர்த்தி முன்னிலையிலும்  நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.


திமுக அதிமுக தனியே போட்டியிட்டால் அதிமுக மகத்தான வெற்றி பெறும்


அப்பொழுது பேசிய அவர் , அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை பார்த்தால் நாம் எதிர்கட்சி போல் தெரியவில்லை. நாம் தான் ஆளும் கட்சி போல் இருக்கிறோம் என்றும் கிளை கழகம் வலுவாக இருந்தால்தான் கழகம் நிலைத்து நிற்க்கும் ,பல கட்சிகள் பலம் இல்லாமல் போவதற்கு அடிமட்டம் பலம் இல்லாமல் போனது தான் காரணம். கூட்டணி இல்லாமல் திமுக அதிமுக தனியே போட்டியிட்டால் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்பதே உண்மை, அம்மா சொன்னது போல் அதிமுக 100 ஆண்டுகள் மக்கள் பணி செய்ய வேண்டும் என்றால் கிளை கழகம் வலுவாக இருக்க வேண்டும்.


எனவே இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் வேகத்திற்கு கிளை செயலாளர்கள் செயல்பட வேண்டும். இளைஞர்களை அரவனைத்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு பூத் கமிட்டி பணிகளை வழங்க வேண்டும், இளைஞர்கள் மக்கள்  சேவை பணி செய்வதற்கு உழைக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். நாளை நீங்கள் தான் பொறுப்புகளுக்கு வர போகீறீர்கள் எனவே உழைக்க வேண்டும். அதிமுகவில் மட்டும் தான் உழைப்பவர்களுக்கு பதிவிகளும் பொறுப்புகளும் வழங்கப்படும்.


திமுகவில் உழைப்பவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும்


திமுகவில் உழைப்பவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளார்கள். அவர் என்ன தியாகியா? செக்கு இழுத்தாரா? உப்பு சத்தியாகிரகம் என்ன என்று தெரியுமா? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் துணை முதல்வர் பதவி. மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே இளைஞர்கள் கடுமையாக உழைத்தால் அதிமுகவில் பதவி தேடி வரும். எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் உழைக்க வேண்டும். 


விரைவில் திமுக பாஜக கூட்டணி


திமுக பாஜக நேரடி உறவு உள்ளது. மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரமாட்டேன் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  சொன்னார். ஆனால் மோடி - ஸ்டாலின் சந்திப்புக்கு பிறகு நிதி வழங்கப்படுகிறது. விரைவில் திமுக பாஜக கூட்டணி வரும். திமுக கூட்டணி கட்சியினர் என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி வருகின்றனர். திருமாவளவன் போவதற்கு ரெடியாகிவிட்டார். திமுக சொன்னால் போய்விடலாம் என்று அவரும், அவர்களாகவே காரணம் சொல்லிப் போகட்டும் என்று திமுகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.