புகார் கொடுக்க வந்த பெண்

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் அக்னி முத்து. இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். காவல் துறையில் பணியாற்றி வந்த அவர் மீது தற்போது பெண்ணிடம் தகாத முறையில் பேசியதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Continues below advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகநேரி அருகே உள்ள காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் குடும்ப பிரச்சனை தொடர்பாக புகார் அளிப்பதற்காக ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது புகார் மனுவை தலைமை காவலர் அக்னி முத்து பெற்றுக் கொண்டு விசாரணைக்காக பதிவு செய்ததாக கூறப்படுகிறது

" நான் இருக்கேன் பார்த்து கொள்கிறேன் "

புகார் மனுவில் இடம் பெற்றிருந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி, தலைமை காவலர் அக்னிமுத்து அந்த பெண்ணை தனிப்பட்ட முறையில் போன் செய்து நான் இருக்கேன் பார்த்து கொள்கிறேன் என பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியதுடன் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Continues below advertisement

காவல் நிலையத்திற்கு உதவி தேடி வந்த பெண்ணிடம் காவலரே இவ்வாறு நடந்து கொண்டதாக வெளியான தகவல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தலைமை காவலர் அக்னிமுத்துவை காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் இதற்கு மேல் இவ்வாறு செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

பணியிடை நீக்கம்

இருவரும் பேசிய ஆடியோவை சமூக வலைத் தளங்களில் பலரும் பகிர்ந்த நிலையில், சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றது. எனவே சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் துறை அதிகாரிகள் அக்னி முத்துவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் பெண் புகார்தாரரிடம் தகாத முறையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் அக்னிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.