Thoothukudi Firing: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 21 அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

மனித உரிமை ஆணையம் தானாக வழக்கு எடுத்து விசாரித்து வந்தது. அதன் விசாரணைகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் வழக்கை சரியாக நடத்தி முடிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

 

அதில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுளது. மேலும், சம்பவம் நடைபெற்ற போது ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட எஸ்பி, வட்டாட்சியர் உள்ளிட்ட 21 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விளக்கம் கேட்கபட்டதாகவும்,  அதற்கு அவர்களும் பதிலளித்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விசாரணையில் உள்ள 21 பேருக்கும் துப்பாக்கிச்சூட்டும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

 

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றது. மே 22ம் தேதி நடைபெற்ற இந்த போராட்டம் கலவரமாக வெடித்ததால் கூட்டத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் குற்றவாளிகளாக சுட்டு தள்ளியதற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

 

இந்த ஆணையம் விசாரணை நடத்தி கடந்த 2022ம் ஆண்டு இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை சட்டமன்றத்தில் 4 பகுதிகளாக முன் வைக்கப்பட்டன. நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த விசாரணை அறிக்கையில்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பது தெரிந்தும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் அலட்சிய போக்கே கலவரத்து காரணம் என்றும், மாவட்ட ஆட்சியர் தனது கடமையை சரியாக செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களை குறி வைத்து தலை, முதுகு பகுதியில் சுட்டுள்ளனர் என்றும், வன்முறை சம்பவத்தில் காவல்துறை வரம்புக்கு மீறி செயல்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 21 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.