கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் முப்பெரும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா மற்றும் சனாதள எதிர்ப்பு பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பொள்ளாச்சி பகுதிக்கு வருகை தந்தார். கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”கிருஷ்ணகிரி மாவட்டம் அருள நிதியில் ஆணவ கொலை நடைபெற்றது. தாய் மகன் தூங்கும் பொழுது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். சாதி மனிதனை ஆட்டிப் படைக்கிறது. இதில் காயம் அடைந்த அனுசியா என்ற தலித் பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை கண்டித்து எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆணவ படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர்களுக்கான பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக்கூறுவது அபத்தமாக இருக்கிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கான கோரிக்கை. தமிழ்நாடு அரசு அந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. அவ்வளவு தான். முடிவெடுக்கக்கூடிய இடத்தில் ஒன்றிய அரசு தான் இருக்கிறது. இது நீண்ட நாள் கோரிக்கை. பல மாநிலங்களில் இக்கோரிக்கைக்கு அரசே ஆதரவு தெரிவித்துள்ளது. 4 மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேர்தல் வாக்கு வங்கி அடிப்படையில் எந்த அணுகுமுறையும் இல்லை. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது பாஜக கருத்தாக இருக்கலாம். ஆனால் அரசின் கருத்தாக இருக்கக்கூடாது. அரசு மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியல் இல்லை. அது சொத்து பட்டியல். தேர்தலின் போது வேட்பாளர்கள் தங்களது சொத்து கணக்குகளை தேர்தல் கமிஷனிடம் ஒப்படைப்பார்கள். அதை திருடி பொய்யான தகவலை பரப்பி உள்ளார். ஊடகங்களில் தான் இருக்க வேண்டும் தன்னைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என உள்நோக்கத்துடன் அவதூறுகள் வதந்தி பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறார். ஒட்டுமொத்தத்தில் அரசியலில் அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னராக மாறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்