தியாகராஜ சுவாமிகள் ஆராதனை நிகழ்ச்சிகள் ரத்து - 22ஆம் தேதி ஒருநாள் மட்டும் விழா நடத்த முடிவு

தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படியும் இந்த வருட ஆராதனை விழாவினை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த தினமான ஜனவரி 22 ஆம் தேதி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது

Continues below advertisement

847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜ சுவாமிகள் காலமானார். அவர் சித்திநிலை  எய்துவதற்கு முன் வந்த தசமி இரவில் இன்னும் 10 நாட்களில் இறைவனின் பாதார விந்தத்தைச் சேருவதாகக் கனவு கண்டார். இவரின் பூதவுடலானது அவர்தம் சீடர்களால் தக்க மரியாதைகளுடன் திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.  இங்கு ஆண்டு தோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி தியாக பிரம்மத்திற்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்து வழக்கம்.

Continues below advertisement

அதன் படி சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175 ஆவது வருட ஆராதனை விழாவினை, விழாக் குழுவினர், வரும் ஜனவரி  மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மிக வேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா, ஓமைக்ரான் வைரஸ் தொற்று நோயை கருத்தில் கொண்டும், விழாவில் கலந்து கொள்ளும் இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் நலனை உறுதி செய்யும் வகையிலும், விழா ஏற்பாடுகள் சபையின் தலைவரால், விழாக் குழுவினருடன் கலந்து ஆலோசித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. 


அதனடிப்படையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கருத்தில் கொண்டும், தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படியும் இந்த வருட ஆராதனை விழாவினை சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினமான ஜனவரி 22 ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 22 ஆம் தேதி அன்று காலை வழக்கம்போல் உஞ்சவிருத்தியும், பின்னர் விழாப்பந்தலில் நாதஸ்வர கச்சேரியும், அதன் பின்னர் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவிலான இசைக்கலைஞர்களை கொண்டு பஞ்சரத்தின கீர்த்தனையுடன் கூடிய இசை அஞ்சலியுடன் இவ்வருட ஆராதனை விழா நிறைவு பெறும். மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி விழா பந்தலுக்குள் 100 நபருக்கு மேல் அனுமதியில்லை என்பதால் விழாவின் போது பந்தலுக்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என விழா குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சபையின் புரவலர்கள், நலன்விரும்பிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும், இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும்  இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும்.   பொது மக்கள், இசைகலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மீக வாதிகளின் நலனில் அக்கரை கொண்டு இப்படி எடுக்கப்பட்ட இந்த முடிவினை ஏற்றுக்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் எப்போதும் போல் தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என திருவையாறு ஸ்ரீ தியாக ப்ரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement