திருவாரூர் மாவட்டம் மருதவஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா வயது 36. இவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சத்யாவிற்கு திருமணம் நடந்து 13 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்யாவிற்கு விவாகரத்து ஆன நிலையில் தனது தந்தையான கணேசன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சத்தியா கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பேரளத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் சத்தியா கடந்த இரண்டு தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் நேற்று எப்பொழுதும்போல் பள்ளிக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சத்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்யா விஷமருந்தி இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தபோதிலும் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி சத்யா உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் சத்யாவின் தந்தை தனது மகள் உயிரிழப்பிற்கு காரணம் பள்ளி நிர்வாகம் எனவே பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரளம் காவல் நிலையத்தில் சத்யாவின் தந்தை கணேசன் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவரது தந்தை புகாரில் கூறும்பொழுது இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என தனது மகள் கூறி வந்ததாகவும் மேலும் நேற்று பள்ளிக்கு சென்றவுடன் அவர் உயிரிழந்திருப்பது எனக்கு சந்தேகத்தை ஏற்படுவதாகவும் காவல்துறையில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார். இதில் தாளாளர் மன உளைச்சல் அளித்ததாக கூறப்படும் கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது
இந்த நிலையில் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சத்யாவிடம் நெருங்கிப் பழகிய சக ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் சத்யா உயிரிழந்ததற்கு முன்னால் கூறிய செய்திகள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சத்யாவிற்கு ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் சத்யாவின் 13 வயது மகள் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளியில் பல லட்சம் பணத்தை சத்தியா கையாடல் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறி சத்யாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து பூந்தோட்டம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நீங்கள் கொடுத்த புகாருக்கு வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சத்யாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர் இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரம் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளியின் முதல்வர் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் பேரளம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050