திருவாரூர் அடுத்த பவித்திரமாணிக்கம் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இடும்பன் என்பவரின் மகன் நீலகண்டன் (45). இவரது மனைவி சபியா (35) திருச்சியில் நிலஅளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் இனியா என்ற மகள் உள்ளார். நீலகண்டன் வேலைக்கு ஏதும் செல்லாமல் மகளை கவனத்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேலாளராக இருக்கும் சத்தியசீலன் நட்பின் காரணமாக சிறு தொகைகளை நீலகண்டனிடம் கடனாக பெற்று திரும்ப அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூபாய் 3 லட்சம் ரொக்கப் பணத்தை சத்தியசீலனுக்கு நீலகண்டன் கடனாக கொடுத்து உதவியுள்ளார். நீலகண்டனின் மனைவி சபியா விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது பணம் குறித்து கேட்டபோது பணம் நண்பரிடம் கொடுத்துள்ளதாகவும் விரைந்து வாங்கி தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாக சத்தியசீலனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நீலகண்டனின் செல்போன் எண்ணை சத்தியசீலன் தடை செய்துள்ளார். மேலும் பணம் கேட்டு நேரடியாக சென்றபோதும் பணம் தர சத்தியசீலன் மறுத்துள்ளார். இதனால் நீலகண்டன் குடும்பத்தில் வேறு ஏதும் பெரும் பிரச்சனை உருவாகி விடுமோ என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் மகள் தூங்கிய பின்னர் தனது நண்பர் சத்தியசீலனிடம் மூன்று லட்ச ரூபாய் கடன் கொடுத்ததாகவும் அதனை தற்போது அவர் தர மறுப்பதாகவும் இதனால் குடும்ப பிரச்சினை ஏற்படுமோ என்ற அச்சத்தில் தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு நேற்று இரவு வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இன்று காலை நீலகண்டனின் மகள் தமிழ் இனியா எழுந்து பார்த்தபோது தந்தை தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருவாரூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து நீலகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் நீலகண்டன் எழுதி வைத்துள்ள கடிதத்தை முக்கிய ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீலகண்டன் குறித்தும் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் காவல்துறையினர் விசாரணை தீவிரமடைந்துள்ளது. நண்பரிடம் கொடுத்த 3 லட்ச ரூபாய் திரும்ப பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் நீலகண்டன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.