Thiruvarur GH: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழப்பு:


சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவரது மகன் சக்தி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்) நான்காம் ஆண்டு படித்து வந்தார். 


இந்த நிலையில், இன்று காலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்கு எட்டு மணிக்கு வர வேண்டிய சக்தி வெகு நேரமாகியும் வராத காரணத்தினால் அவரை தொலைபேசி மூலமாக மருத்துவர்கள் தொடர்பு கள்ள முயற்சித்தனர். தொலைபேசி அழைப்புகளை எடுக்காத காரணத்தினால், சக மாணவர்கள் அவரை சந்திப்பதற்காக சக்தியின் அறைக்கு சென்றுள்ளனர்.


அவரது அரை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த வார்டன் மற்றும் சக மாணவர்கள், சேர்ந்து முயற்சித்து அறையைத் திறந்து பார்த்தபோது, அவர் தனது படுக்கையிலேயே இறந்து கிடந்துள்ளார்.


உயிரிழப்புக்கான காரணம் என்ன?


இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நிகழ்வு இடத்துக்கு வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், "அவர் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வேறு ஏதும் பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை" என சக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்களும் சந்தேகிக்கின்றனர்.


பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதனிடையே சீர்காழியில் உள்ள உயிரிழந்த மாணவர் சக்தியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், இளம் மாணவருக்கு மாரடைப்பு ஏறபட்டதாக வரும் தகவல் அப்பகுதியில் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அச்சமூட்டுவதாக சக மாணவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்