பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாராட்டம். பாஜக மாவட்ட தலைவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுதியவர் சிக்கினார்.
திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்று வருகிறது.அதன் அடிப்படையில் இன்று மதியம் பி.ஏ பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு நடைபெற்றது.
தேர்வறையில் இருந்த பேராசிரியர் மாணவர்களின் ஹால் டிக்கெட் போன்றவற்றை பரிசோதிக்கும் போது பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுத வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து உடனடியாக அந்த இளைஞரை தனி அறையில் அமர வைத்து விசாரித்த போது அவர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த மாதவன் மகன் 29 வயதான திவாகரன் என்பதும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு வருட உடற்கல்வி ஆசிரியர் படிப்பை படித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இவர் தற்போது திருவாரூரில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
மேலும் திவாகரன் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் லெட்சுமாங்குடி தோட்டச்சேரியை சேர்ந்த 48 வயதான பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டுள்ளார்.தனக்கு யாருக்கு தேர்வு எழுதுகிறோம் என்பது தெரியாது என்றும் தன்னை திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் என்பவர் தேர்வு எழுத அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேர்வு மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல்துறையினர் திவாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன் தேர்வு எழுதிய திவாகர் மற்றும் திருவாரூர் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோரை திருவாரூர் தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் பல்கலைக்கழக இளநிலை தேர்வு ஒன்றை எழுதிய நபருக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் எனது அரசியல் வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்வு கொண்டு எனது நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எனக்கு பதில் ஆள்மாற்றம் செய்து ஒருவர் தேர்வு எழுதியதாக செய்திகள் வெளி வருகின்றன. இதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்