திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை மாவட்டத்திலேயே மிக பெரிய அணை இந்த அணையாகும். சென்ன கேசவ மலைகளுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை தமிழகத்தில் குறிப்பிடத்தக்க உள்ள அணைகளுள் இதுவும் ஒன்று. இந்த அணை  1958 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீரின் கொள்ளளவு 7321மில்லியன் கன அடி.


சாத்தனூர் அணையில் சுற்றுலா துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம், மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், கலைநயமிக்க வண்ண ஓவியங்கள், பெண் வீரத்தை உணர்த்தும் வகையில் ஓவியம், நீச்சல் குளம், படகு குழாம், வண்ண மீன் கண்காட்சி, ஆதாம் ஏவல் பூங்கா, குழந்தைகள் விளையாடி மகிழ சறுக்குமரம், முதலைப் பண்ணை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. 





மேலும் இந்த அணையில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், நாகேஷ் ஆகியோர் நடித்த சில படங்களில் சாத்தனூர் அணையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சாத்தனூர் அணைக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அணையை சுற்றி பார்த்து மகிழுந்து செல்வார்கள். அணையில் உள்ள ஷட்டர்கள் சுமார் 63 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த ஷட்டரை அகற்றிவட்டு புதியதாக ஷட்டர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 



அதன்பேரில் கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், தென்பெண்ணையாறு கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து  தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். தற்போது சாத்தனூர் அணைக்கு நபார்டு வங்கி நிதியுதவி மூலம் ஷட்டர்கள் மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு பணிக்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் சாத்தனூர் அணையில் பழைய ஷட்டர்கள் அகற்றிவிட்டு புதிய ஷட்டர் அமைக்கும் பணி துவங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. 


 




 



இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:


சாத்தனூர் அணை உள்ள ஷட்டர்கள் சுமார் 63 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் அதனை அகற்றிவிட்டு புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் அரசு இந்த பணி ஒப்படைத்துள்ளது. சுமார் 45 கோடி மதிப்பீட்டில் 20 ஷட்டர்கள் மாற்றப்படுகிறது. முதல் கட்டமாக அணையில் முகப்பு பகுதியில் உள்ள 9 மதகுகளில் ஷட்டர்கள் அகற்றிவிட்டு புதியதாக ஷட்டர் அமைக்கும் பணி நடக்கிறது.


 


ஒரு ஷட்டருக்கு வெல்டிங் வைக்க சுமார் 15 நாட்கள் ஆகும். 20 ஷட்டர்கள் பணிகள் முடிவடைய 300 நாட்களுக்கு மேல் ஆகும். பணிகள் முடிவடைந்து தலைமை பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஷட்டர்கள் அனைத்தும் தரமாக இருக்கிறது என அரசு அறிவித்தால் மட்டுமே சாத்தனூர் அணையில் தண்ணீர் தேக்கப்படும் .இந்த ஆண்டு அணையில் தண்ணீர் தேக்கி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.