திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள அய்யாக்கண்ணு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது (32). இவர் கூலித்தொழிலாளி, அவரது மகள் சாரதா வயது (5). நேற்று முன்தினம் மாலை கடைக்கு செல்வதற்காக பெற்றோரிடம் கூறி அவர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்த, ஒரு ரூபாய் நாணயத்தை சிறுமி சாரதா விளையாடி கொண்டிருந்தார் திடீரென எதிர்பாரத விதமாக சிறுமி நாணயத்தை விழுங்கிவிட்டார்.
அதனால், சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடி துடித்தார். அதிர்ச் சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், தொண்டையில் சிக்கிய நாணயத்தை எடுக்க முயற்சித்துள்ளனர் என கூறப்படுகிறது . அவர்களின் தவறான முயற்சிகளால், நாணயம் மெல்ல மெல்ல நழுவி உணவுக்குழாய் பகுதிக்கு சென்றுவிட்டது. அதைத்தொடர்ந்து, சிறுமி பெற்றோர் சாரதாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமிக்கு முதலில், எக்ஸ்ரே பரிசோதனை நடந்தது. அப்போது, உணவுக்குழாயின் ஆபத்தான பகுதியில் நாணயம் சிக்கியிருந்தது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, காது,மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் இளஞ்செழியன், மயக்கவியல் மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர். சுமார் இரண்டு மணி நேரமாக போராடி, உணவுக் குழாயின் கீழ் பகுதியில் சிக்கியிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை, எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தவந்த சிறுமி சாரதா, தற்போது முழுமையாக குணமடைந்து. மிகவும் ஆபத்தான நிலையில் அழைத்துவரப்பட்ட சிறுமியை, ஆபரேஷன் இல்லாமல் மருத்துவக்குழுவினர் காப்பாற்றியது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இது குறித்து, மருத்துவர் "இளஞ்செழியனிடம்" தொடர்பு கொண்டு பேசிய போது
‛‛பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் சிறிய அளவில் உள்ள பொருட்களை அவர்களது கையில் கொடுக்கக் கூடாது. நாணயமோ அல்லது வேற ஒரு பொருட்களை குழந்தைகள் விழுங்கியதும், முதலில் தொண்டையில் சிக்கி விடும். எனவே, அதனை மருத்துவர்களாகிய நாங்கள் எளிதில் அகற்றிவிடு வோம். ஆனால், சிறுமி சாரதா நாணயத்தை விழுங்கியதும், அதனை வெளியில் எடுக்க அவரது உறவினர்கள் மேற்கொண்ட அவசரமான மற்றும் தவறான முயற்சிகளால், நாணயம் தொண்டையில் இருந்து நழுவி உணவுக்குழாய் கீழ் பகுதிக்கு சென்றுவிட்டது.
எனவே, கடும் சவால்களுக்கு இடையே நாணயத்தை அறுவை சிகிச்சையில்லாமல் அகற்றினோம். தற்போது சிறுமி நலமுடன் உள்ளார். குழந்தைகள் எதிர்பாராமல் நாணயத்தை விழுங்கினால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வது அவசியம் என்பதை பெற்றோர் உணர வேண்டும் என்று தெரிவித்தார்.