திருவண்ணாமலை மாவட்டம் இராந்தம் கிராமத்தில் நடுகற்கள் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாவலர் வையவன், ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த மன்னார்சாமி ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சி.பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர்கள் கூட்டாக ஆய்வு செய்தனர். இராந்தம் கிராமத்தில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு இடங்களில் 4 நடுகற்கள் கண்டறியப்பட்டது. அதில் ஒன்று ஊரின் நடுவே உள்ள விநாயகர் கோயில் அருகில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. அந்த நடுகல்லை ஊர் மக்கள் உதவியுடன் வெளியே எடுத்து சீரமைத்து கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. படியெடுக்கப்பட்ட கல்வெட்டை அவ்வூர் பள்ளி மாணவர்கள் தங்கள் பாடபுத்தகத்துடன் ஒப்பிட்டு ஆர்வமாக ஆய்வு செய்தனர்.


 





இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகனிடம் பேசுகையில்,


இக்கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபல், இக்கல்வெட்டு பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தியது என்றும், இக்கல்வெட்டு வட்டடெழுத்து தமிழில் உள்ளது என்றும், இதில் நந்தி வர்மனின் 28-ஆவது ஆட்சியாண்டில் மண்டை குளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் பூசலில் இறந்து பட்டான் என்று குறிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கல்வெட்டில்  குறிப்பிடப்படும் நந்தி வர்மன் என்பது வட்டெழுத்து அமைதியைக் கொண்டும் ஆட்சியாண்டைக் கொண்டும் இரண்டாம் நந்தி வர்மன் (கி.பி. 759) காலத்தியதாக குறிக்கலாம் என்றும், இதில் குறிப்பிட்டுள்ள மண்டைகுளநாடு என்பது தற்போது போளுர் அருகே உள்ள மண்டகுளத்தூர் என்று அழைக்கப்படும் ஊரானது. இது 7,8 ஆம் நூற்றாண்டில் மண்டை குளநாட்டின் தலைநகராக இருந்துள்ளது.


 




இந்த நாட்டுக்கு உட்பட்ட இராந்தம் பகுதியில் நடைபெற்ற கால்நடைகளைக் காக்கும் போரில் மண்டைகுளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் இறந்துள்ளார். அதன் நினைவாக இக்கல் நடப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற நடுகற்களில் காணப்படும் இறந்துபோன வீரனின் உருவம் இந்த நடுகல்லில் இல்லை. எழுத்து மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள சொரகுளத்தூர் கிராமத்தில் உள்ள நடுகல்லும் மண்டைகுளநாட்டைச் சேர்ந்ததாகும். எனவே மண்டைகுளநாடு என்பது போளூர் திருவண்ணாமலைக்கு இடைப்பட்ட பகுதியாக அக்காலத்தில் இருந்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில் தற்போது கிடைத்துள்ள இந்த நடுகல் கல்வெட்டு மற்றும் அவ்வூரில் கிடைக்கும் கருப்பு சிவப்பு, பானை ஓடு ஆகியவற்றை கொண்டு இப்பகுதி தொன்மையான பகுதி என்றும் தெரியவருகிறது. தமிழக வரலாற்றுக்கு முக்கிய பங்களிக்கும் இது போன்ற நடுகற்களை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.