திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் அண்மையில் வந்தவாசி தேசூர் பகுதியில் தொல்லியல் தடயங்களை ஆய்வு செய்தது, அப்போது தேசூர் ஏரி மதகு அருகே ஒரு கல்வெட்டும் கெங்கம்பூண்டியில் ஒருகல்வெட்டும், மகமாயி திருமணியில் ஒரு கல்வெட்டும் என மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன . 


இக்கல்வெட்டுகளை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகன், வரலாற்று ஆய்வாளர்கள் பழனிச்சாமி, வெங்கடேஷ், முனைவர் எ. சுதாகர், மின் வாரிய அலுவலர் பழனி ஆகியோருடன் ஆய்வு செய்யப்பட்டது. இக்கல்வெட்டுகள் அனைத்தும் 1000  ஆண்டுகளுக்கு முந்திய, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்மேலாண்மையைப் பற்றி கூறுகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் கல்வெட்டுகளில் ஏரி வெட்டுதல், மதகு அமைத்தல், பாசன வசதி செய்தல், நீர் பங்கீடு, பாராமரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை செய்த விவரங்கள் அதிக அளவில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஏரி அமைத்தலும் அதனை பாதுகாத்தலும் முக்கிய அறச்செயலாக அக்காலத்தில் இருந்துள்ளதை இக்கல்வெட்டு மூலமாக அறியலாம்.  


 




அந்த வரிசையில் வந்தவாசி வட்டம் தேசூர் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள் முக்கியத்துவம் பெற்றவையாகும். கெங்கம்பூண்டி ஊரின் நடுவே தற்போது கடவுள் வழிபாடாக  உள்ள பலகை கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபால் அவர்கள் இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டில், பராந்தகன்  சோழனின் 30 ஆட்சியாண்டு வெட்டப்பட்ட கல்வெட்டு எனவும் இக்கல்வெட்டில்  சிங்கபுர நாட்டைச் சேர்ந்த கங்கம்பூண்டி என்ற ஊரில் உள்ள மனங்காடுளங்கிடாசானை காலமுக்தி என்பவர் பெரிய மடை ஒன்று செய்வித்தார் என்று குறிப்பிடுகிறது. 


இந்த கல்வெட்டில்  மடையின் கோட்டுருவம் வரையப்பட்டுள்ளது. கல்வெட்டுடன் கோட்டு உருவரும் சம காலத்தியது ஆகும் இக்கல்வெட்டுடன் கோட்டுருவமும் அமைந்த அரிய கல்வெட்டு ஆகும் என தெரிவித்துள்ளார். தேசூர் பெரிய ஏரி மதகு அருகில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கன்னரதேவனின் 22-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும். இக்கல்வெட்டு ஏழு வரிகள் உள்ளன. கல்வெட்டு முழுமைபெறாமல் இருந்தாலும் இக்கல்வெட்டு கிடைத்த இடம் மதகு சீர் செய்யும் போது பூமியின் அடியில் கிடைத்ததாகும். இக்கல்வெட்டு இருந்த இடத்தில் அமைந்துள்ள பழைய அகமடை மதகில் இரண்டு புறம் உள்ள கல்பலகையில் அழகான  வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. 



ஏரியில் இருந்து மதகு வழியாக நீர்வெளியேறும் தொழில் நுட்பத்தினை விளக்குவது போன்று புடைப்புச் சிற்பம் காணப்படுவதும் இதன் சிறப்பாகும். இங்கு கிடைக்கும் கல்வெட்டை கொண்டு இந்த மதகு கன்னர தேவன் காலத்தில் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும் இந்த ஏரியின் வெளிப்பகுதியில் தாமரைப்பதக்கம் போன்ற தூண்பலகை காணப்படுகிறது. இதில் அசோக சக்கரத்தில் உள்ளது போன்று 24 இதழ்கள் அமைந்துள்ளது.  இதுவும் இவ்வூரில் கிடைக்கப்பெறும் அரிதான சிற்பவகையாகும். மகமாயிதிருமணி கிராமத்தின் மாந்தாங்கல் பகுதியில் உள்ள ஏரியில் பாறையில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டு எழுத்தமைதியின் படி 9 அல்லது 10 நூற்றாண்டு ஆகலாம். இக்கல்வெட்டில் ஏரிக்கு ஐநூற்றுவர் சபை தூம்பு அமைத்துக்கொடுத்ததை குறிப்பிடுகிறது. 



இந்த கல்வெட்டுகள் மூலம் தேசூர் பகுதியில் அக்காலத்தில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் மதகில் புடைப்புச் சிற்பமும் தாமரைப்பதக்கம் உள்ள தூணும் அப்பகுதியின் அரிய கலைப்பொக்கிஷமாகும். இவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பண்டைய கால தொழில் நுட்பட்பத்தை அறிந்துகொள்வதும்  வரும் தலைமுறையின் கடமையாகும் என்றும் இவற்றை பாதுகாக்க அரசும் அப்பகுதி மக்களும் முன்வர வேண்டும் என்ற வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.