திருப்புவனம் இளைஞர் அஜித் மீது புகார் அளித்த நிகிதா மீது, 2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித் குமார் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், இந்த வழக்கு தொடர்பாக மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறது. தற்போது இந்த வழக்கானது சிபிஐ விசாரணக்காக மாற்றப்பட்டுள்ளது.
மோசடி வழக்கு
இந்நிலையில், அஜித் மீது வாய்மொழியாக திருட்டு புகார் அளித்த நிகிதா தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக, நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு பதிவாகி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிரபலமான இந்த வழக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் அளித்த புகாரின் பேரில், நிகிதா, அவரது தாயார் சிவகாமி, தந்தை மற்றும் பிறர் என ஆறு பேருக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புகாரில் இருந்தது என்ன?
திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் அளித்துள்ள இந்த புகாரில் நிகிதாவும் அவருடைய தாயார் சிவகாமி, தந்தை உட்பட ஆறு பேர் மீது மோசடிப்புகார் பதிவாகியுள்ளது.
அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அப்போதையை துணை முதலமைச்சரின் பிஏ-வை தனக்கு தெரியும். அவர் மூலம் எங்களது சொந்தக்காரர்களுக்கு வேலை வாங்கி தருவதாகவும் அந்த வகையில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக ஓன்பது லட்சமும், விஏஒ பணி வாங்கி தருவதாக ஏழு லட்சமும் கொடுத்தோம். இப்படி பதினாறு லட்சம் வரை கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை எதுவும் வாங்கித்தராமல் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்தி வந்தனர். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. பின்னர் பணத்தை திருப்பு தர முடியாது என்று கூறி எங்கள் மிரட்டினார்கள் என்றும் அந்த எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அஜித் வழக்கில் புகார் உண்மையா?
தற்போது, திருப்புவனம் வழக்கில் நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்தை அழைத்து சென்றது சரியா? என சந்தேகம் உருவாகியுள்ளது. ஏற்கனவே பண மோசடி வழக்கில் இருந்து தப்பித்த நபர் மீது அளிக்கப்பட்ட புகாரின் நம்பகத்தன்மை குறித்தும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தரப்பில் இன்னும் எந்த ஒரு விளக்கமும் வெளியிடப்படவில்லை. எனினும், திருப்புவனம் சம்பவம் மேலும் திருப்பங்களை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.