சிவகங்கை காவலாளி லாக் அப் மரணம்.. அரசை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்.. முழு விவரம்
கோவில் காவலாளியை சாதாரண வழக்கில் தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று 2 நாட்களாக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் கடந்த 29-ந்தேதி முன்பு இறந்தார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அஜித்குமாரின் உறவினர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அவர் போலீசார் தாக்கியதில் இறந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது சிறப்பு விசாரணை குழு அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கொலை வழக்காக மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற காவல் மணரங்கள் நடக்காமல் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க. வக்கீல் மாரீஸ்குமார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல திருப்புவனம் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, சிவகங்கை மாவட்ட பா.ஜனதா தலைவர் பாண்டித்துரை ஆகியோரும் தனித்தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் ஹென்றி டிபென், மாரீஸ்குமார், அருண்சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததன் விளைவாக இறந்த அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் தி.மு.க.வினர் ரூ.50 லட்சம் வரை நிவாரணமாக வழங்குகிறோம், அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை பெற்று தருகிறோம் என்று கூறி சமாதானப்படுத்த முயன்று உள்ளன என வாதாடினர்.
பின்னர் வக்கீல் ஹென்றி டிபென் ஆஜராகி, அஜித்குமாரை போலீசார் இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது எனக்கூறி, வீடியோவை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோவில் காவலாளியை சாதாரண வழக்கில் தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று 2 நாட்களாக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? அவரை 2 நாட்களாக போலீசார் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது உயர் அதிகாரிகளுக்கு தெரியாதா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, அஜித் குமார் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தனி விசாரணை அமைப்பான சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. அஜித்குமாரின் இறப்பு குறித்து மாஜிஸ்திரேட் முறையான விசாரணையை நடத்தி வருகிறார். தமிழக அரசு இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கையை பாரபட்சம் இன்றி எடுத்து வருகிறது என வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி இந்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் இப்படி நடந்து கொள்ள இயலாது. எனவே இந்த விவகாரத்தில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தான் காவல்துறையினரின் கடமை. அவ்வாறு இருக்கும் போது தங்களின் கடமையை மீறி இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கை விரிவாக விசாரணை செய்வதற்காக பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அப்போது திருப்புவனம் மாஜிஸ்திரேட் தனது விசாரணை அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தாக்கல் செய்ய வேண்டும். போலீசார் அஜித்குமாரை தாக்கியதை வீடியோ பதிவு செய்த சக்தீஸ்வரன், மடப்புரம் காளியம்மன் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.
பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் இந்த வழக்கை அதே நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர்.அப்போது திருப்புவனம் மாஜிஸ்திரேட்டு, வெங்கடபதி பிரசாத், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் ஆகியோர் ஆஜராகி தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்தனர். மேலும் கோவில் செயல் அலுவலர், சக்தீஸ்வரன் ஆகியோரும் நேரில் ஆஜரானார்கள்.
பின்னர் பிரேத பரிசோதனையின் தொடக்க அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள், இந்த கொலை சாதாரண கொலை வழக்கு போல இல்லை. அஜித்குமாரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அவரது உடலில் உள் மற்றும் வெளிப்பகுதியில் 44 இடங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிக்கை எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது. போலீசார் அஜித்குமாரை சித்ரவதை செய்து கொன்றுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என கருத்து தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், அவரது உடலில் எந்த உறுப்பையும் போலீஸ்காரர்கள் விட்டுவைக்கவில்லை.முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இந்த விவகாரத்தில் இத்தனை தீவிரம் காட்டியது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. காவல்துறையினர் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ஒரு மாநிலம், தன் குடிமகனை கொடூரமாக கொன்றுள்ளது. இதற்கு பரிகாரமாக அரசு தற்போது உரிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர் கோவிலின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் எங்கு உள்ளன என கேள்வி எழுப்பினர். அப்போது கோவில் ஊழியர்கள், கேமரா பதிவுகளை தாக்கல் செய்தனர். சில காட்சிகளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெற்றுக்கொண்டார் என்றனர்.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, அஜித்குமார் இறந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடக்கிறது. சம்பந்தப்பட்ட போலீசார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் சக்தீஸ்வரனிடம், வீடியோவை எங்கிருந்து எடுத்தீர்கள்? எவ்வளவு நேரம் எடுத்தீர்கள்? என்ன நடந்தது? யார் அங்கு இருந்தார்கள் ?என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், கோவில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்த வீடியோ எடுத்தேன், சிறிது நேரம் தான் எடுத்தேன். என்னை போலீசார் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்துடனேயே வீடியோ எடுத்தேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், நம் நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமான தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் மிகவும் ஆபத்தானது என கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து மனுதாரர்களின் வக்கீல்கள் ஆஜராகி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் உண்மை வெளிப்படாது. எனவே சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றனர்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்கள் தரப்பினர் தேவையில்லாமல் இந்த விவகாரத்தை பெரிதாக்குகின்றனர் என்றார். அதற்கு நீதிபதிகள், சாத்தான்குளம் சம்பவத்தை நீங்கள் எப்படி கையாண்டீர்கள். அதுபோலவே இதனையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இந்த வழக்கை ஏன் சி.பி.ஐ. விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வக்கீல், இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.சி.ஐ.டி. உணர்வுப்பூர்வமாக விசாரிக்க வேண்டும். இந்த சம்பவம் தொடாபான கோவிலில் பதிவான கேமரா காட்சிகளும், போலீஸ் நிலையத்தில் பதிவான காட்சிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த வழக்கை மதுரை 4-வது கோர்ட்ன் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும். அவரிடம் வழக்கு ஆவணங்கள், கேமரா பதிவுகளை வழங்க வேண்டும். நீதிபதியின் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையையும் இந்த கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.





















