திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே காரை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சண்முகம் (45). அவரது உறவினரான பூபதி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் நந்தகுமார் (38) என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
இதில் பூபதிக்கு, ஆதரவாக சண்முகம் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்முகம் நேற்று இரவு கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தார்.
காரை ஏற்றிக் கொல்ல முயற்சி
இதனை பார்த்த நந்தகுமார், காரை வேகமாக ஓட்டிச் சென்று சண்முகம் மீது ஏற்றிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது கார் வேகமாக வருவதைப் பார்த்த சண்முகம், அங்கிருந்து சற்று விலகி சென்றுள்ளார்.இந்த சம்பவத்தில் சண்முகத்தின் இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. இதுகுறித்து சண்முகம் கந்தலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதிமுக பிரமுகர்
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நந்தகுமார் அதிமுக கட்சியின் கந்திலி ஒன்றிய இளம் பாசறை ஒன்றிய துணைத் தலைவராக உள்ளது தெரிய வந்தது. இந்த நிலையில் சண்முகம் அளித்த புகாரின் பெயரில் கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் நந்தகுமாரை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேர்தல் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதிமுக பிரமுகரே இப்படிச் செய்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
