மதுரை திருப்பரங்குன்றம் மலையில், இந்து- முஸ்லிம் வழிபாட்டு முறையில் முரண் எழுந்துள்ளதாக மத அமைப்புகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் நடப்பது என்ன? இங்கே விரிவாகக் காணலாம்.
சங்க காலம் முதலே பழம்பெருமையைக் கொண்ட மதுரை மாநகரில், திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் முருகர் கோயில் உள்ளது.
அதேபோல மலை மேலே பல நூறு ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. மலையின் இன்னொரு புறத்தில், சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியாவின் தர்கா அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் கல் படுக்கைகளும் சமணர் பள்ளிகளும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மலை மேலே கோயிலும் தர்காவும்
திருப்பரங்குன்றம் மலையில் இரண்டு மதத் தலங்களுக்கும் பக்தர்கள் செல்லத் தனித்தனியாகப் பாதைகள் அமைந்துள்ளன. ஆண்டாண்டு காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் தங்களின் இடங்களில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
முருகர் கோயிலிலும் காசி விஸ்வநாதர் கோயிலிலும் இந்து பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதேபோல சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது.
இத்தனை ஆண்டுகளாக இந்துக்களும் முஸ்லிம்களும் தாயும் பிள்ளையுமாகப் பழகி வந்தனர். சொல்லப் போனால் தர்காவில் நடத்தப்படும் விழாக்களுக்கு திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்தே மின்சார வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கட்டணத்தை இஸ்லாமியர்கள் செலுத்தி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
பிரச்சினை தொடங்கிய புள்ளி எது?
இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து,18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடனைச் செலுத்தும் கந்தூரி விழா நடைபெறும் என தர்கா நிர்வாகம் அறிவித்தது. எனினும் இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
’’தர்காவுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். ஆனால் ஆடு, கோழி உள்ளிட்ட அசைவங்களைக் கொண்டு சென்று பலியிட்டு, சமைத்து உண்ணக் கூடாது’’ என்று குரல் எழுப்பின. ஆடு, கோழியுடன் சென்ற இஸ்லாமியர்கள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
எம்எல்ஏ, எம்.பி. ஆய்வு
இதை அறிந்து, மணப்பாறை தொகுதி எம்எல்ஏவும் வக்ஃப் வாரிய உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான அப்துல் சமது திருப்பரங்குன்றத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல ராமநாதபுரம் எம்.பி.யும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான நவாஸ் கனி, நிகழ்வு இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் சிக்கந்தர் தர்கா இருப்பதாகவும் அதனால் அதை ஆய்வு செய்ய வந்திருப்பதாகவும் நவாஸ் கனி தெரிவித்தார்.
அப்போது அவருடன் வந்தவர்கள், மலைப் பகுதியில் அமர்ந்து பிரியாணி சாப்பிட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இதை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் நான் பதவியை விட்டு விலகத் தயார் என்று நவாஸ் கனி சவால் விடுத்தது பேசு பொருளானது. அதேபோல திருப்பரங்குன்றம் வந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துப் பதிவிட்டதும், இணைய வெளியில் வைரலானது.
இந்துக்களும் இஸ்லாமியர்களும் சொல்வது என்ன?
இந்துக்கள், ’’மலை மீதுள்ள தர்கா பல நூற்றாண்டுகள் பழமையான இடம் கிடையாது. இடையில் அமைக்கப்பட்டு, இப்போது புதிதாக அசைவம் சமைக்கும் பழக்கமும் உருவாகி இருக்கிறது. எங்களின் புனித இடத்தில் உயிர்களைப் பலியிடக் கூடாது, வழிபாடு நடத்த நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை’’ என்று கூறுகின்றனர். அதே நேரத்தில், ‘’ஏற்கெனவே கடந்த காலங்களில் நாங்கள் அங்கு அசைவம் சமைத்து உண்டிருக்கிறோம். காலம் காலமாக இருக்கும் நடைமுறைகளைப் பின்பற்ற அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்று இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரசு என்ன நினைக்கிறது?
அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, ’’மலை மீது ஏற்கெனவே இருக்கும் பழக்கம் பின்பற்றப்படும். முருகரும் அல்லாவும் காப்பாற்றப்படுவர்’’ என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் மலையில் அசைவம் சமைக்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இஸ்லாமியர்களின் நடவடிக்கைக்கு எதிர்த்துப் போராட்டத்துக்கும் அனுமதி கோரின. எனினும் அரசு அனுமதி அளிக்கவில்லை. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி 4 (இன்று) போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் மற்றுமொரு பாபர் மசூதி பிரச்சினை கூடாது
எனினும் ’’மதுரையில் மற்றுமொரு பாபர் மசூதி பிரச்சினை கூடாது. பிப்.11 வரை விழாக் காலம் (தைப்பூசம்) என்பதால், போராட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது’’ என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து மலை பாதுகாப்பு போராட்டத்தில் ஈடுபடுவோர், திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டம் நடத்தக்கூடாது என்றும் பழங்காநத்தம் பகுதியில், போராட்டம் 1 மணி நேரம் நடத்திக்கொள்ளலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அந்த வகையில் இந்து முன்னணியினரும் இந்து மத ஆதரவாளர்களும் பழங்காநத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் பகுதியே இத்தகைய சம்பவனங்களால் பரபரப்பாக உள்ளதாகக் கூறப்பட்டாலும் அங்குள்ள மக்கள், இயல்பாகவே இருக்கின்றனர்.