“திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்றியாக வேண்டும். ஏற்ற மாட்டேன் என்று சொல்கிற ஒவ்வொருத்தரும் பாரதத்தாயின் குழந்தையாக இருக்க முடியாது” என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், “தவெக ஆட்சி இந்து விரோத ஆட்சியாக, மோசமான கிறிஸ்தவ மதவெறி ஆட்சியாகதான் உள்ளது. தவெகவிற்கு இந்துக்கள் ஏமாந்து போய் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். விரைவில் மாற்றி வாக்கு செலுத்துவார்கள். விஜய் தன்னுடைய உண்மையான பெயரை மறைத்து வைத்திருந்தார்.
திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்றியாக வேண்டும். ஏற்ற மாட்டேன் என்று சொல்கிற ஒவ்வொருத்தரும் பாரதத்தாயின் குழந்தையாக இருக்க முடியாது. திமுக என்றாலே ஊழல் பேர்வழிகள் என்றுதான் அர்த்தம். அவர்கள் கைது செய்யப்பட்டதை நான் வரவேற்கிறேன். அவர்கள் வெளியிலே வர முடியாத அளவிற்கு சிறையில் வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
பாஜகவின் செயல்பாடு தமிழகத்தில் தற்போது குறைந்துள்ளதா? என்ற கேள்விக்கு என்னுடைய செயல்பாடு குறைந்துள்ளது என கேட்கிறீர்களா என நகைச்சுவையாக பதில் அளித்து சென்றார்.
கோயில் சிறப்பு பூஜை, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கோயிலில் சிறப்பு பூஜை செய்து இனிப்பு வழங்கி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கொண்டாடினார்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் நவம்பர் 24ஆம் தேதி மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதே வேளையில், தீபம் ஏற்றும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது என்றும் கோஷமிடவோ கும்பலாக கூடவோ அனுமதி இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் தூண் பகுதிக்கு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது இந்த தீர்ப்பை பல அரசியல் தலைவர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
