Continues below advertisement

திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன.?

திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், இன்று இரவு சுமார் 8 மணி வரை தீபம் ஏற்றப்படவில்லை. இதனை கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டன. நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கமிட்டனர். தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார். மேலும், தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு

போலீசாரின் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்களை பிடித்து போலீசார் அழைத்து வந்தனர். மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிகப்பட்டுள்ளது. ஏராளமானோர் திரண்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் கூட்டம் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவினை மதுரை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே மாலை 5 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது" என வாதம் முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி வழக்கை மாலை 6.05 மணிக்கு ஒத்திவைத்தார்.

உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே ஏற்றப்பட்ட தீபம்

இந்நிலையில், நூறாண்டு பாரம்பரியத்தின் படி, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை அழைத்துக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த தீர்ப்பு கிடைத்தவுடன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, அங்கு திரண்டிருந்த இந்து முன்னணியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை தகர்த்து மலை மீது ஏறி இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது இந்து முன்னணியினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து, போலீசாருடன் ஆர்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.