தமிழ் தேசியம் அரசியல் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் பேசுகிறார் சீமான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மீண்டும் தன்னை ஒரு அரசியல்வாதியாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் என்கிற பொறுப்பை மறந்து அவர் பேசுவதும் நடந்து கொள்வதும் நீடிக்கிறது. தலித்களை பாஜக பக்கம் கவர்வதற்காக குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் பக்கம் ஈர்ப்பதற்காக பேசுகிறார்.
தலித் ஒருவர் முதல்வர் ஆக வேண்டும் என்பது அப்பாவி தலித்களை வலைத்துபோடும் ஒரு சூழ்ச்சி. இதற்கு ஒருபோதும் தமிழ்நாட்டை சேர்ந்த தலித்கள் மயங்க மாட்டார்கள். தலித்களை பற்றி கரிசனமாக பேசுவதும், தலித்கள் முதல்வர் ஆக வேண்டும் என பேசுவதும் ஒரு திட்டமிட்ட வலதுசாரி நாடகம் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
வேங்கை வயல் கிராமத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அறவழியில் போராடி வருகிறார்கள். அவர்களை சென்று சந்திப்பதற்கு காவல்துறை கெடுபிடி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறை இந்த கெடுபிடிகளை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
சமூக நீதி, சமூகம் என பேசும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளுநரை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால் ஆதிதிராவிட மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த நினைக்கிறார் என்றே கருதுகிறேன். அவர் முயற்சி பழிக்காது.
சீமான் பொருத்தமில்லாத ஒரு அரசியலை பேசிக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்க வேண்டிய தேவை என்ன வந்தது? பெரியாரை விமர்சிக்க வேண்டும் என்ற தேவை என்ன வந்தது? ஒன்னும் புரியவில்லை. ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜகவினரின் வாக்குகளை பெற இந்த உத்தியை கையாள்கிறாரா என்ற ஐயம் எழுகிறது. தந்தை பெரியார் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். அவருடைய சம காலத்திலேயே அவரை வீழ்த்த பார்ப்பனிய உயர்சாதி அமைப்புகள் மிக கடுமையாக விமர்சித்தார்கள். வீத்த முயற்சித்தார்கள். முடியவில்லை. தொடர்ந்து அந்த பணியில் இருக்கிறார்கள்.
அதே வேளையை இவர் செய்கிறார் என்றால் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா என்ற கேள்வி எழுகிறது. அவர் செய்யும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது. யாருக்கு துணை போகிறார். தமிழ் தேசிய அரசியல் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான அரசியலை ஏன் பேசுகிறார் என்ற கேள்வி எழுகிறது.
கவன ஈர்ப்புக்காக இப்படி செய்கிறார் என்று எண்ணத்தோன்றுகிறதே தவிர கருத்தியல் அடிப்படையில் எதுவும் இல்லை. கட்சி மீதான தாக்குதல், இனவாத தாக்குதல், பாசிசத்தை நோக்கி பரிணாமம் பெற்று வருகிறார். அவருடைய எதிர்காலத்துக்கு நல்லதல்ல என சுட்டிக்காட்டியிருக்கிறேன். மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.