முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெறுகிறது. கடந்த இரு தினங்கள் முன்னதாகவே இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. முக்குலத்தோர் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனிடையே இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "தேவர் திருமகனார் என அறிஞர் அண்ணா அவரை அன்போடு அழைக்க தொடங்கினார். எல்லா கட்சிகளும் தலைவர், தொண்டர் என வலம் வரும் இந்த காலக்கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகம் மட்டும் அண்ணன், தம்பிகள் என்ற பாசத்தோடு கட்சி நடத்துகிறீர்கள் என்ற ஆச்சரியத்தோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள், எஸ்.எஸ்.தென்னரசு அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். 1963 ஆம் ஆண்டு தேவர் மறைவு நேரத்தில் அண்ணா, கலைஞர் கருணாநிதி இருவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். 1969 ஆம் ஆண்டு பசும்பொன்னுக்கு வந்து அவருடைய நினைவிடத்தை பார்வையிட்டு தேவையான அரசு உதவிகளை கருணாநிதி முதலமைச்சராக இருந்த நேரத்தில் செய்தார்.
2007 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தார். நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்து தந்ததும், தேவர் வாழ்ந்த இல்லத்தை ரூ.10 லட்சம் செலவில் புதுப்பித்ததும், ரூ.9 லட்சம் செலவில் நூற்றாண்டு விழா வளைவு, ரூ.9 லட்சம் செலவில் புகைப்பட கண்காட்சி, ரூ.4 லட்சம் செலவில் நூலகம், ரூ.5 லட்சம் மதிப்பில் முடி இறக்கும் இடம், ரூ.5 லட்சம் செலவில் பால்குடம் எடுக்கும் இடம், ரூ.5 லட்சம் செலவில் முளைப்பாரி எடுக்கும் இடம் அனைத்தும் கலைஞர் கருணாநிதி செய்து கொடுத்தார்.
மதுரையில் கம்பீரமாக உள்ள தேவர் சிலை திறப்பு விழாவை அரசு விழாவாக நடத்தி அன்றைய குடியரசுத்தலைவராக இருந்த வி.வி.கிரி அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தார். மேம்பாலம், அறக்கட்டளை ஆகியவற்றிற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டினார். கமுதி, முசிறி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் தேவர் பெயரில் கல்லூரி அமைத்ததும் கலைஞர் கருணாநிதி தான். இரு தினங்கள் முன்பு கூட முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மண்டபம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் வீரராக பிறந்தார், வாழ்ந்தார், மறைந்தார், இன்றைக்கும் போற்றப்படுகிறார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் “ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், “சாலையில்தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்பது தான் திராவிடம். இந்த உண்மையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகை பாஜக கட்சியின் அலுவலகமாக மாறியுள்ளது. ” என குறிப்பிட்டார்.