ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்பது கேள்வியல்ல, எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பது தான் கேள்வி என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்றோ, வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்ற கேள்வி பொறுத்தமானதாக இருக்காது. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது தான் பொறுத்தமான கேள்வியாக இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.
மேற்கொண்டு பேசிய அவர், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறது என்பதைப் பாருங்கள். குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 80 விழுக்காடுக்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி மகத்தான வெற்றியைப் பெற நாங்கள் தேர்தல் களத்தில் நின்று பணியாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பச்சைப் பொய் அண்ணாமலை
இண்டிகோ விமானம் எமர்ஜென்சி கதவு விவகாரம் குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், அண்ணாமலை மாறி மாறி பேசி பச்சைப் பொய் பேசி வருகிறார். தவறு செய்திருந்தால் ஒத்துக் கொள்ள வேண்டியது தானே. ஏன் பொய் கூற வேண்டும். மேலும், ரஃபேல் வாட்ச் பில் தன்னிடம் இருந்தால் இப்போதே வெளியிடலாம் அல்லவா? ஏன் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசத்தினை நீட்டிக்க வேண்டும்? அதற்கான பில்லை தயார் செய்வதற்கு தானே. மேலும், பாஜக ஒன்றியத்தை ஆளுகிறது என்பதற்காக தமிழ்நாட்டில் பாஜக பெரிய கட்சி என்று அர்த்தம் கிடையாது. தமிழ்நாடு பாஜகவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு? பொறுப்பாளர்கள் எவ்வளவு? கட்சியின் நிலை என்ன என்பதை அண்ணாமலை வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.